ஆன்லைன் ரம்மி தடையை நீக்குங்கள்..! நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல்- நீதிபதி முக்கிய உத்தரவு
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழக அரசு தடைவிதித்து மசோதா நிறைவேற்றிய நிலையில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு பட்டியலிடப்பட்டால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தகவல்
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை
ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த விளையாட்டிற்கு தடை விதிக்கும் வகையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் மசோதா கொண்டுவரப்பட்டது. இதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் ஆன் லைன் விளையாட்டு தடை சட்டத்தை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஆன் லைன் விளையாட்டு நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் வழக்கு - விளையாட்டு நிறுவனம்
ஆன் லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதித்து தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு சமீபத்தில் ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இந்த சட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், ரத்து செய்யக் கோரியும், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் கலைமதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக ஆஜராகி முறையீடு செய்தார். முறையீட்டை கேட்ட நீதிபதிகள், மனுத்தாக்கல் செய்து, மனு முறையாக இருந்தால் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும், இல்லாவிட்டால் வழக்கமான பட்டியலில் இடம்பெறும் என்றும் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்