தனிக் குடிநீர்த் திட்டப் பணியில் ரூ.32 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறி குடிநீர் குழாயிடம் மனு அளித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர் நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் 5-வது தூண் அமைப்பினர்.

கோவில்பட்டி தனிக் குடிநீர்த் திட்டப் பணியில் ரூ.32 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக புகார் கூறியும், அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் 5-வது தூண் அமைப்பினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி தனிக் குடிநீர் திட்டத்திற்கான பணி, ரூ.81.82 கோடியில் 2013 மே 9-ஆம் தேதி தொடங்கியது. பின்னர் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டு, மறு ஒப்பந்தப்புள்ளி மூலம் சென்னையைச் சேர்ந்த நிறுவனத்துக்கு ரூ.75.55 கோடிக்கு 2016 ஜனவரியில் உத்தரவு வழங்கப்பட்டது.

இதையடுத்து, 2016 பிப்ரவரியில் பணி தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், 2-வது பைப் லைன் திட்டத்தில் ரூ.32.25 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த இழப்பிற்கு காரணமான அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர் அனைத்துலக அனைத்து சாதி சமய நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் 5-வது தூண் அமைப்பினர்.

இதன், நிறுவனத் தலைவர் சங்கரலிங்கம், உறுப்பினர் முருகன் ஆகியோர் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள குடிநீர் குழாயிடம் மனு அளித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.