விழுப்புரம்
வருவாய் சான்று வழங்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, இந்து காலசார சமிதி தமிழ்நாடு பூசாரிகள் பேரமைப்பு நிர்வாகிகள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இந்து கலாசார சமிதி தமிழ்நாடு பூசாரிகள் பேரமைப்பு மாவட்ட தலைவர் தேவராஜி, அமைப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தனர்.
அதில், “இந்து அறநிலையத்துறை மூலம் பூசாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நலவாரியம், ஓய்வூதியம் பெற தகுதியாக ஆண்டு வருவாய் சான்று 24 ஆயிரம் ரூபாயிற்குள் இருக்க வேண்டும்.
நாங்கள், வருவாய் துறையிடம் இதற்கான சான்று பெற சென்றால், ஆண்டு வருவாய் குறைந்த பட்சம் 48 ஆயிரம் ரூபாய் தான் வழங்கப்படும் என்றும், இதை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்து, சான்று வழங்க மறுக்கின்றனர்.
அரசின் கீழ் இயங்கும் இரு துறைகளின் மாறுபட்ட செயல்பாடுகளால் அரசு சலுகைகள் ஏதும் பெற முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
