தூத்துக்குடி

தூத்துக்குடி ஆட்சியரகத்தில் நடைப்பெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த மக்கள் அரசு இடத்தை வளைத்துபோடும் தனி ஆள்; டாஸ்மாக் ஊழியர்களிடம் மாமூல் கேட்கும் போலீஸ்;  சோலார் மின் இனைப்பு வழங்குவதில் மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது.

இந்த்க கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். அவர் மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

அப்போது கயத்தாறு தாலுகா கொப்பம்பட்டி கிராம மக்கள் மனு ஒன்றைக் கொடுத்தனர். அந்த மனுவில், "எங்கள் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான இடத்தை அதிகாரி ஒருவர் உதவியுடன் தனிநபர் ஒருவர் ஆக்கிரமிக்க முயற்சிக்கிறார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்த நபர், அந்த அரசு இடத்தை சுற்றி கம்பி வேலி அமைக்க முயன்றார். அதனை ஊர்மக்கள் சேர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து, வேலி அமைக்கும் பணியை தடுத்துள்ளோம்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தனர்.

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், "மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்களிடம் கலால் துறை உயர் அதிகாரிகள் விற்பனை அடிப்படையில் பல ஆயிரம் ரூபாய் மாமூல் பெற்று வருகிறார்கள். மாமூல் கொடுக்க மறுப்பவர்கள் மீது பொய்யான குற்றசாட்டை சுமத்தி நடவடிக்கை எடுக்கிறார்கள்.

இதனால் பணியாளர்கள் கடன் வாங்கி, அதிகாரிகளுக்கு மாமூல் கொடுக்கும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் டாஸ்மாக் பணியாளர்களை வற்புறுத்தி மாமூல் வசூல் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

திருவைகுண்டம் தாலுகா கருங்குளத்தை சேர்ந்த ஆண்டியா என்பவர் கொடுத்த மனுவில், "திருவைகுண்டம் தாலுகா கருங்குளத்தில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் 2013 - 14-ஆம் ஆண்டு கட்டப்பட்ட வீடுகளுக்கு சோலார் மின் கருவி இணைப்பு வழங்குவதற்காக, அரசு ஒதுக்கீடு செய்த பணத்தில் ரூ.30 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டது.

ஆனால், இதுநாள் வரை பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளுக்கு சோலார் மின் கருவி இணைப்பு வழங்கப்படவில்லை. இதில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

அனைத்து மனுக்களையும் பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனுதாரர்களுக்கு உறுதியளித்தார்.