திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சித்ரா பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வரும் ஏப்.,15, 16 ஆகிய நாட்களில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஆட்சியர் கூறியுள்ளார். 

கிரிவலம் செல்ல அனுமதி:

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி தூய்மைப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஆட்சியர், தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. எனவே சித்ரா பவுர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் செல்ல அனமதிக்கப்படுவர் என்று தெரிவித்தார். இதன்படி 2 ஆண்டுகளுக்கு அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 15, 16 ஆம் தேதிகளில் 15 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக ஆட்சியர் கூறினார். இதனால் அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலப் பாதையை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது நம்முடைய பொறுப்பாகும் என்று தூய்மை பணியாளர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

அன்னதானம் வழங்க முன்பதிவு:

மேலும் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு அன்னதானம் வழங்குவோர் https://foscos.fssai.gov.in எனும் இணையதளத்தில் முன்பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சித்ரா பவுர்ணமி அன்று சுமார் 40 இடங்களில் அன்னதானம் வழங்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். எனவே, மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்படாத இடங்களில், அன்னதானம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கோவில் பகுதியை சுற்றி தள்ளுவண்டி மூலம் வியாபாரம் செய்வோரும் தங்களது விவரங்களை பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்றார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சிவபெருமானின் அக்னித் தலமாக விளங்குகிறது. மேலும் இக்கோவில் சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது. கோவிலுக்கு அருகில் உள்ள மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம், பக்தர்கள் கிரிவலம் செல்லவது வழக்கம். இதனால பவுர்ணமி நாட்களில் ஒவ்வொரு மாதமும் வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக வருகை தருவது வழக்கம். இதனிடையே கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.