பெரியார் சிலையை சேதப்படுத்திய பாஜகவினரின் காழ்ப்புணர்சியை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும், பெரியாரைப் பார்த்து பாஜகவுக்கு ஏன் பயம் வருகிறது என்றும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.

அண்மையில் திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் 25 ஆண்டுகாலமாக இருந்த புரட்சியாளர் லெனின் சிலையை பாஜகவினர் அகற்றியுள்ளனர். இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்த நிலையில், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல, தமிழகத்தில் உள்ள சாதிவெறியர் பெரியாரின் சிலையும் அகற்றப்படும் என்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிட்பபை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும கண்டனம் தெரிவித்தது. ஸ்டாலின், வைகோ, எடப்பாடி பழனிசாமி என அரசியல் தலைவர்கள் இதற்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தன்னைக் கேட்காமல் அட்மின் அவதூறாகப் பதிவிட்டுள்ளார் என்று கூறி அப்பதிவை ராஜா நீக்கினார். இருப்பினும், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை, சிலர் கும்பலாக வந்து உடைத்தனர். அவர்களை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தனக்கு எதிரான கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில்தான், அந்த பதிவு என்னுடய கவனத்துக்கு வராமல் பதிவிடப்பட்டது என்றும் சில விளக்கங்களைக் கூறியிருந்தார். அவரின் இந்த பதிவு அவருக்கே தெரியாமல் போடப்பட்டாலும், அதற்கு உரியவர் ஹெச்.ராஜாதான் என்றும் கருத்து கூறி வருகின்றனர்.

தமிழகத்தில் ஹெச்.ராஜாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து டுவிட்டரில் பதிவுட்டுள்ளார். அதில், பெரியார் சிலையை சேதப்படுத்திய பாஜகவினரின் காழ்ப்புணர்ச்சியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சாதிய அமைப்புகளால் அடிமைப்பட்டிருந்த மக்களுக்கு சுய மரியாதையை வழங்கியவர் பெரியார். சமூக சீர்திருத்தவாதியான பெரியாரைப் பார்த்து, பாஜகவுக்கு ஏன் பயம் வருகிறது? பாஜகவின் வர்க்க ஏற்றத்தாழ்வு கொள்கைகளை இதன் மூலமாக மக்கள் பார்க்க முடியும் என்று பதிவிட்டுள்ளார்.