புதுக்கோட்டை

பெரியார் சிலையை உடைப்பில் சம்மந்தப்பட்ட இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மீதும், இந்த பிரச்சனைக்கு காரணமான எச்.ராஜா மீதும் உரிய நடவடிக்கை கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் யூசுப் ராஜா, நகர துணைச்செயலர் பாண்டியன் உள்ளிட்டோர் புகார் மனு ஒன்றை அளித்தனர்.  இவர்களுக்கு அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் நியாஸ் தலைமைத் தாங்கினார். 

அதில், "புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை விடுதியில் மார்ச் 19-ஆம் தேதி பெரியார் சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக மத்திய ரிசர்வ் படையில் தலைமை காவலராக பணியாற்றும் செந்தில் குமார் கைது செய்யப்பட்டார். 

இந்த நிலையில், பெரியாரின் சிலை உடைப்பை நற்செய்தியென ஆலங்குடி அருகேயுள்ள வானக்கன்காட்டைச் சேர்ந்த இந்து முன்னணியின் மாவட்டச் செயலாளர் அவரது முகநூலில் பதிவிட்டுள்ளார். இதனால் பெரியார் சிலை உடைப்பில் இவரும் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, இவர் மீதும், பெரியாருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பேசிவரும் பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.