இந்திய அளவில் சிறந்த 10 காவல் நிலையங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ள பெரியகுளம் காவல்நிலைய காவலர்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் டாப் 10 காவல் நிலையங்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்து வருகின்றது. அந்த வகையில் உள்துறை விவகாரங்கள் துறை அமைச்சகம் 2018-ம் ஆண்டுக்கான நாட்டின் சிறப்பான 10 காவல்நிலையங்களின் பெயர்களை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தின் பெரியகுளம் காவல் நிலையம் 8-வது இடத்திலும், புதுச்சேரியின் நெட்டப்பாக்கம் காவல் நிலையம் 4-வது இடத்தையும் பிடித்துள்ளது. 

இந்நிலையில் சிறந்த 10 காவல் நிலையங்களில், 8-வது காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டதற்கு துணை முதலமைச்சர் ஓபிஎஸ் நேரில் சென்று காவலர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து காவல் நிலையம் மக்களுக்கான சிறப்பான பணியை ஆற்ற வேண்டும் என்றும் காவலர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுடன் ஓபிஎஸ் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்;-இந்திய அளவில் சிறந்த காவல் நிலையங்களில் ஒன்றாக பெரியகுளம் காவல்நிலையம் தேர்வு செய்யப்பட்டது தமிழகத்துக்கு பெருமையை சேர்ந்துள்ளது என்றார். இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.