Peoples struggle to smash alcohol bottles with the alarm open the alarm shop
திருவண்ணாமலை
கீழ்பென்னாத்தூரில் மக்கள் சாராயக் கடையை திறக்கக் கூடாது என்று எச்சரித்தும் சாராயக் கடையை திறந்தால் கடைக்குள் நுழைந்து சாராய பாட்டில்களை அடித்து நொறுக்கியும், சாலையில் சாராய பாட்டில்களை போட்டு உடைத்து மக்கள் போராடினர்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த மலப்பாம்பாடி அருகே உள்ளது பள்ளியம்பட்டு கிராமம். இங்கு குடியிருப்பு பகுதியின் அருகே நேற்று முன்தினம் மதியம் புதிதாக டாஸ்மாக் சாராயக் கடை திறக்கப்பட்டது.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் டாஸ்மாக் சாராயக் கடையின் முன்பு திரளாக கூடினர்.. பின்னர் டாஸ்மாக் சாராயக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், டாஸ்மாக் சாராயக் கடையை வேறு பகுதிக்கு மாற்றும்படி முழக்கங்களை எழுப்பினர்.
இதனையடுத்து அவர்கள் டாஸ்மாக் சாராயக் கடை விற்பனையாளரிடம் டாஸ்மாக் சாராயக் கடையை நாளை திறக்கக்கூடாது? என்று உத்தரவிட்டு அங்கிருந்து அனைவரும் கலைந்துச் சென்றனர்.
ஆனால், நேற்று பகல் 12 மணிக்கு டாஸ்மாக் சாராயக் கடை விற்பனையாளர் பள்ளியம்பட்டில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடையை திறந்தனர்.
இதனையறிந்த 100-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் டாஸ்மாக் சாராயக் கடையின் முன்பு திரண்டனர். பின்னர் மக்கள் விற்பனையாளரிடம் கடையை திறக்க கூடாது என்று கூறியும், எவ்வாறு கடையை திறக்கலாம்? என்று கேட்டனர்.
அப்போது, மக்களுக்கும், டாஸ்மாக் சாராயக் கடை விற்பனையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சினம் கொண்ட மக்கள் டாஸ்மாக் சாராயக் கடையின் உள்ளே நுழைந்து கடையில் இருந்த சாராய பாட்டில்கள்களை அடித்து நொறுக்கினர்.
சாராய பாட்டில் பெட்டிகளை கடையின் வெளியே கொண்டு வந்தும் சாலையில் போட்டு உடைத்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.
அதனைத் தொடர்ந்து மக்கள் திருவண்ணாமலை - சென்னை சாலையில் மலப்பாம்பாடி அருகேயுள்ள கூட்டுச் சாலையில் சாலை மறியல் செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்பென்னாத்தூர் காவல் ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சாலை மறியல் செய்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, மக்கள் தங்கள் பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடை வைக்க அனுமதிக்க மாட்டோம் என உறுதியளித்தால் சாலை மறியலை கைவிடுகிறோம் என்று கூறினார்கள்.
அதற்கு காவலாளர்கள், தொடர்புடைய அதிகாரிகளிடம் பேசி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினார்கள். இதனையடுத்து மக்கள் சாலை மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்தனர்.
இந்தச் சம்பவத்தால் திருவண்ணாமலை - சென்னை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
