தேனி

தேனியில் 20 நாள்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால் தவிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளுக்கும் வைகை ஆற்றில் அமைக்கப்பட்ட உறைகிணறுகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 

இதுதவிர ஆழ்துளை கிணற்று நீரும் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் ஆண்டிப்பட்டி பேரூராட்சி மூலம் விநியோகம் செய்யும் குடிநீர் அனைத்து பகுதிகளுக்கும் சீராக கிடைக்கவில்லை என்று மக்கள் தொடர்ந்து புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர்.

மேலும், நள்ளிரவு நேரத்தில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுதாகவும், குடிநீர் ஆபரேட்டர்கள் தரக்குறைவாக பேசுவதாகவும் மக்கள் கடுமையான புகார் கூறுகின்றனர். 

இந்த நிலையில் ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு முனியாண்டி கோவில் தெரு பகுதியில் கடந்த 20 நாள்களாக குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் சினம் அடைந்த 13-வது வார்டு பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் தேனி - மதுரை சாலைக்கு வெற்றுக் குடங்களுடன் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யக்கோரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த ஆண்டிப்பட்டி பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் காவலாளர்கள் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில்ம், உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.