நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதால் இறால் குட்டைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடினர்.

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கருகாவூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் மூலம் இறால் குட்டைகள் அமைப்பதற்காக மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டப்பட்டன.  

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இறால் குட்டைகள் அமைக்கும் பணி கைவிடப்பட்டது.

இந்த நிலையில்,  ஏற்கெனவே தோண்டப்பட்ட இடத்தில் இறால் குட்டை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இறால் குஞ்சுகள் விடுவதற்கு குட்டைகளில் நீர்த் தேக்கப்பட்டதாம்.

இதனையறிந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர்  இறால் குட்டை அமைக்கப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்ட இடத்துக்கு திரண்டுச் சென்றனர்.

அங்கே இறால் குட்டைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இறால் குட்டைகள் அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்று முழக்கமிட்டனர். பின்னர், அவர்கள், இறால் குட்டைகளில் தேக்கப்பட்டிருந்த நீரை வெளியேற்றினர். அதுமட்டிமின்றி குழாய்களையும் சேதப்படுத்தினர்.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள், "கீராநல்லூர் கிராமத்தில் ஏற்கெனவே நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது.  இந்த நிலையில் இங்கு இறால் குட்டை அமைத்தால், நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்படும். விவசாயம் செய்ய முடியாத நிலையும் ஏற்படும். எனவே, எங்கள் கிராமத்தில் இறால் குட்டை அமைக்க அனுமதிக்கமாட்டோம்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.