ஈரோடு

ஈரோட்டில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் கோழிப்பண்ணையை அகற்றக் கோரி 19 ஆண்டுகளாக போராடி வரும் மக்கள் கோழிப்பண்ணையை மூடும் வரை போராடுவோம் என்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே பெரியவீரங்கிலியில் 7 இலட்சம் எண்ணிக்கை கொண்ட தனியாருக்குச் சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது.

இந்தப் பகுதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 200–க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10 மணியளவில் இந்தக் கோழிப்பண்ணையை முற்றுகையிடுவதற்காக வந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெருந்துறை தாசில்தார் செந்தில்ராஜ், திங்களூர் காவல் ஆய்வாளர் சாந்தமூர்த்தி மற்றும் காவலாளர்கள் அங்குச் சென்று முற்றுகையிட வந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மக்கள், “பெரியவீரங்கிலியை சுற்றி வடமலை கௌண்டன்பாளையம், கைக்கோளபாளையம், சின்னவீரசங்கிலி, கோடாபுலியூர், கிண்கிணிபாளையம் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு 6000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

பெரியவீரசங்கிலியில் கடந்த 20 ஆண்டுகளாக தனியாருக்குச் சொந்தமான கோழிப்பண்ணை இயங்கி வருகிறது. இந்த கோழிப்பண்ணையின் கழிவுகளால் ஏற்படும் ஈக்களால் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

குடிநீர், உணவுப்பொருட்கள் மீது உட்கார்ந்து விடுகிறது. இதனால் உணவுப்பொருட்கள், குடிநீர் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ என எதையும் செய்ய முடியவில்லை. ஈக்கள் கடிப்பதால் கால்நடைகளும் அவதிப்பட்டு வருகின்றன.

பெரியவீரசங்கிலியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு விவசாயிகள் ஊற்றும் பால் கேன்களில் ஈக்கள் செத்து மிதக்கின்றன. இந்த பால்தான் சித்தோடு பால் பண்ணைக்கு அனுப்பப்படுகிறது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகிறது.

எனவே, கோழிப்பண்ணையை அகற்றக்கோரி கடந்த 19 ஆண்டுகளாக சாலை மறியல், உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். மேலும் கால்நடை துறை, சுகாதாரத்துறை, சுற்றுச்சூழல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம்.

ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்காலிக தீர்வு கூறி எங்களை சமாதானப்படுத்தி வந்தனர். எனவே உடனடியாக சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வரும் கோழிப்பண்ணையை அகற்ற வேண்டும்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.

அதற்கு தாசில்தார், “நீங்கள் மதியம் 1 மணியளவில் பெருந்துறை தாலுகா அலுவலகத்திற்கு வாருங்கள். அங்கு வைத்து கோழிப்பண்ணை அதிபர், அரசு அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இதுபற்றி முடிவு எடுக்கலாம்” என்று கூறினார்.

அதற்கு மக்கள் மறுப்பு தெரிவித்து, அதிகாரிகள் இங்கு வந்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து தாசில்தார் அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் மக்கள், “கோழிப்பண்ணையை அகற்றும் வரை போராட்டம் தொடரும்” என்று கூறி கோழிப்பண்ணை தீவன ஆலை முன்பு உட்கார்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.