People who have been waiting for six years to clean the sewer

மதுரை

மதுரையில் சாக்கடை அமைக்கும் பணியை அரைகுறையாக விட்டுச் சென்றதால் தெருவில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனை சரிசெய்ய வேண்டி ஆறு வருடங்களாக பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, ஆதிமுத்துமாலை தோட்டத்தில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உள்ளன. கீழப்புதுார் மற்றும் கௌணம்பட்டி சாலையை இணைக்கும் பாதை நாடார் பள்ளி விளையாட்டு மைதானத்தின் வழியாக வருகிறது.

இந்தப் பகுதியில் முன்பெல்லாம் தெருக்களில் இருந்துவந்த சாக்கடை கௌணம்பட்டி சாலையில்தான் சென்று சேர்ந்தது. இதற்கு நகராட்சியில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சாக்கடை அமைக்கும்போது எதிர்ப்பு தெரிவித்ததால் அரைகுறையாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.

இதனால் காலி பிளாட்களில் சாக்கடை நிரம்பி ஆரம்பித்தது. தற்போது சுற்றிலும் கட்டடங்கள் கட்டி காலியிடங்களில் சாக்கடை வராமல் தடுத்துள்ளனர். இதனால் தெருவில் தேங்கும் சாக்கடையால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு சீர் கெட்டுள்ளது. பல நோய்கள் பரவும் அளவுக்கு இந்த பகுதியில் சுகாதாரம் சீர்கேடு அடைந்துள்ளது.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியது: "இந்தத் தெரு வழியாகத்தான் பேரையூர் சாலைக்கும், கௌணம்பட்டி சாலைக்கும் மக்கள் செல்கின்றனர்.

சாக்கடையை கௌணம்பட்டி சாலையில் உள்ள பெரிய சாக்கடைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஆறு ஆண்டுகளாக நகராட்சி, தாசில்தார், ஆர்.டி.ஓ.,விடம் முறையிட்டு வருகிறோம். ஆனால், இதுவரை எந்தவித பயனும் இல்லை.

போராட்டம் செய்தாவது சாக்கடை பணிகளை முடிக்கலாம் என்றால் சமரசம் செய்து மீண்டு கிடப்பில் போட்டு கடுப்பேற்றுகின்றனர்.

இங்கு தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றமும், சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. சாக்கடையை விரைவில் சரிசெய்ய வேண்டும்" என்று அவர்கள் வருத்ததோடு தெரிவித்துள்ளனர்.