People who have been for 300 years to drive away evil forces

கெட்ட சக்திகளை விரட்டவும், தங்களுக்குள் ஒற்றுமையை நிலைநாட்டவும் கடந்த 300 ஆண்டுகளாக கிராம மக்கள் ஒருவர் மீது ஒருவர் மாட்டு சாணத்தை எறிந்து கொள்ளும் வினோத திருவிழா நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே கும்மட்டபுரத்தைச் சேர்ந்த மக்கள்தான் இத்தகைய வினோத திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். இந்த சாணி எறி திருவிழா சத்தமில்லாமல் நேற்று நடந்து முடிந்துள்ளது.

இந்த கும்மட்டபுரத்தில் உள்ள பீரேஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு, தீபாவளிப் பண்டிகை முடிந்த 3 நாளில் இந்த வினோத சாணி எறித்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த திருவிழாவில் சாணி எறிவதற்காக இந்த கிராம மக்கள் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமாக சாணியை கொண்டு வந்தனர். அதிகாலை 4 மணிக்கு கோயிலின் தலைமை பூசாரி பீரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து முடித்தவுடன் திருவிழாவை தொடங்கி வைத்தார். அதன்பின் கிராமமக்கள் தாங்கள் வைத்திருந்த சாணியைக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து திருவிழாவை மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.

இந்த கோயிலின் முன்னாள் தலைவர் எம். பசவராஜ் கூறுகையில், “ இந்த திருவிழாவுக்காக எங்கள் கிராம மக்கள் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மாட்டு சாணத்தை சேகரித்து வந்து கோயில் முன் வந்து கொட்டிவிடுவோம். திருவிழா அன்று கோயிலின் பூசாரி பூஜைகள் முடித்தபின், ஒரு கழுதையை ஊரில் ஊர்வலமாக அழைத்து வந்து கோயிலின் முன் நிறுத்தியவுடன் திருவிழா தொடங்கும்.

 அதன்பின் ஒருவர் மீது ஒருவர் சாணியை எறிந்து திருவிழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம். ஏறக்குறைய 300 ஆண்டுகளாக இந்த திருவிழாவை நாங்கள் கொண்டாடி வருகிறோம். 

சாதி, சமயத்தை மறந்து கிராமக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க கொண்டாடப்பட்டு வருகிறது. லிங்காயத்துகள், குரும்ப கவுண்டர், ஒக்கலிக கவுண்டர், ஆதி திராவிடர் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தினரும் ஒற்றுமையாக இந்த விழாவை கொண்டாடி வருகிறோம். மிகவும் அமைதியான முறையில் இந்த திருவிழா நடந்து வருகிறது.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன், கிராம மக்கள் சிலர் பிரேஸ்வரர் சிலையை கோயிலில் இருந்து எடுத்துவிட்டனர். மீண்டும் அந்த சிலையை நிறுவ பக்தர்கள் பெரும் முயற்ச்சி செய்து, சிலையைத் தேடினர். ஆனால், கிைடக்கவில்லை.

 இந்நிலையில், தீபாவளி முடிந்த 3-வது நாள், கோயிலின் அருகே குவிக்கப்பட்டு இருந்த குப்பை மீது ஒரு மாட்டு வண்டியின் சக்கரம் ஏறிச் சென்றது. அப்போது அந்த குப்பையில் இருந்து திடீரென ரத்தம் பீறிட்டு வரத் தொடங்கியது. அதைப் பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து, அந்த குப்பையை அகற்றிப் பார்த்தபோது, அதில் பிரேஸ்வரர் சிலை இருந்தது.

இதையடுத்து, பிரேஸ்வரர் சிலை கிடைத்த தீபாவளிக்கு 3-வது நாளை நாங்கள் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். மேலும், சாணத்தை கொண்டு எறியும் போது, எங்களைச் சுற்றியுள்ள கெட்ட சக்திகள் அகலும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் திருவிழா 4 மணிநேரம் நடக்கும். அதன்பின் அனைவரும் கோயில் குளத்தில் குளித்துவிட்டு, ஒற்றுமையாக கோயில் சார்பில் சமைக்கப்பட்ட உணவை உண்போம்” என்றார்.