கடலூர்

விருத்தாசலத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள் வெற்றுக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே இருசாளகுப்பம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களின் தேவைக்காக அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஏற்றி குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அப்பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த ஆறு மாதங்களாக கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் சினம் கொண்ட கிராம மக்கள் நேற்று காலை இருசாளகுப்பம் பேருந்து நிறுத்தம் அருகே வெற்றுக் குடங்களுடன் ஒன்று திரண்டு விருத்தாசலம் – ஆலடி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள்ம் வேண்டும் வேண்டும் குடிநீர் வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மங்கலம்பேட்டை காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “எங்கள் பகுதிக்கு கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கும், விளை நிலங்களுக்கும் சென்று குடிநீர் பிடித்து வரவேண்டிய நிலை உள்ளது.

எனவ, எங்கள் பகுதிக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

பின்னர் காவலாளர்கள், “இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி ஓரிரு நாட்களில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தனர்.

இதனையேற்ற கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.