People who are studying in dengue eradication in Namakkal are invited to the government work ...

நாமக்கல்

கிராமங்களில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தினர் படித்தவர்களுக்கும், அரசுப் பணியில் இருப்பவர்களுக்கும் அழைப்பு விடுத்தனர்.

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் சார்பில் “நலமான நமது கிராமம், கொசு ஒழிப்பு ஞாயிறு” என்றத் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் ஏடிஸ் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம், லக்கமநாயக்கன்பட்டி கிராமத்தில் நேற்று நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாவட்டத் தலைவர் பெ.ரங்கநாதன், செயலர் லீலாதரன், பொன்.சிவக்குமார், கிராம இளைஞர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் ஆகியோர் அடங்கிய குழு ஒவ்வொரு வீடாக சென்று கொசு புழுக்கள் உள்ள இடங்களை மக்களிடையே காட்டி அவற்றை அழித்தனர். மேலும், டெங்கு பரப்பும் கொசு புழுக்கள் தேங்காமல் இருக்க ஆட்டுச் செக்கை மண்ணைப் போட்டு மூடினர்.

இதுகுறித்து மருத்துவர் பெ.ரங்கநாதன், “ஏடிஎஸ் கொசுக்ளைக் கட்டுப்படுத்த, நலமான நம் கிராமம், கொசு ஒழிப்பு ஞாயிறு என்ற திட்டத்தைத் தொடங்கி உள்ளோம்.

நகர்புறங்களில் வாழும் இளைஞர்கள் குறிப்பாக படித்தவர்கள், அரசுப் பணியில் இருப்பவர்கள், ஓய்வு நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் மூன்று மணிநேரம் சொந்த கிராமத்தில் சொந்தங்களுடன் சேர்ந்து கொசு புழுக்கள் ஒழிப்புப் பணியில் ஈடுபட்டால் நம் சமூகத்தை டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாக்கலாம்” என்று அவர் தெரிவித்தார்.