அரியலூர்,

அரியலூரில் உள்ள வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டனர். ஆனால், மிக விரைவிலேயே ஏ.டி.எம் களில் பணம் தீர்ந்ததால் மக்கள் சிரமத்தை அனுபவித்தனர்.

மிலாது நபி பண்டிகை விடுமுறைக்கு பின்னர் அரியலூர் மாவட்டத்தில் நேற்று வங்கிகள் வழக்கம் போல் செயல்பட்டன. இதனால் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிக் கணக்கில் போடுவது, பணம் எடுப்பது உள்ளிட்ட பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக வங்கிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டனர்.

அரியலூர், தா.பழூர், திருமானூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில ஏ.டி.எம். மையங்களே திறந்து இருந்ததால் அங்கு பணம் எடுக்க மக்கள் நெடிய வரிசையில் நின்றனர். மிக விரைவிலேயே அனைத்து ஏ.டி.எம்களும் பணமின்றி செயலற்றது.

வங்கிகளில் வாரத்திற்கு ரூ.24 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்து இருந்த போதிலும், பெரும்பாலான வங்கிகளில் அதனை செயல்படுத்தவில்லை. போதிய அளவு பணம் வங்கிகளில் கையிருப்பு இல்லை என்பதாலே இந்த நிலைமை.

இது ஒருபக்கம் இருக்க, தினமும் புதிய நோட்டுகள் கோடி, கோடியாய் வருமான வரி அதிகாரிகளால் பிடிக்கப்படுகிற செய்தியும் நம் காதுகளுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறது.

2000 ரூபாய் பணம் எடுக்க கால் கடுக்க வரிசையில் நிற்கும் எளிய மக்கள் இன்னமும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். ஆனால், பண முதலைகள் தங்களிடம் இருக்கும் கருப்பு பணத்தை கமிஷன் மூலம் மிகவும் சுலபமாக வெள்ளைப் பணமாக மாற்றிக் கொள்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாலம் என்பதை கொஞ்சம் கூட யூகிக்காமல் ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவிப்பது மிகவும் மோசமான யோசனையே என்று மக்கள் கருதுவது சரியே.