தமிழகம் முழுவதும் தட்பவெப்பநிலையில் மாற்றம்… சளி, காய்ச்சலால் பொதுமக்கள் பாதிப்பு..! 

தமிழகம் முழுவதும் அதிகப்படியான பனி, வெயில் என தட்பவெப்பநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், பொதுமக்கள் காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அரசு, தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக படையெடுத்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கடந்த நவம்பர் மாதத்தில் பரவலாக மழை பெய்தது. அப்போது சென்னை தவிர பிற கடலோர மாவட்டங்களான ராமேஸ்வரம், கடலூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடு உள்ளிட்ட உடைமைகளை இழந்தனர்.

அதைதொடர்ந்து வந்த புயல்களும் கடலோர மாவட்டங்களுக்கு நல்ல மழையை கொடுத்தது. சென்னையை பொருத்தவரை லேசமான தூறலும், அவ்வப்போது கனமழையும் பெய்து வந்தது. இதனால் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில், நடப்பாண்டு மழை சென்னை வாசிகளை சிரமத்துக்குள்ளாக்கவில்லை.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த ஒருவாரகாலமாக மாலை, 6 மணிக்கு துவங்கி மறுநாள் காலை, 9 மணி வரை பனியும், அதன் பிறகு வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. இதனால் மாலையில், 6 மணிக்கே இருட்டாகி விடுகிறது. மேலும் இரவு முழுவதும் குளிர்காற்று வீசி வருகிறது.

இதனால் அலுவலகங்களுக்கு அதிகாலையில் வேலைக்கு செல்வோரும், மாலை, 6 மணிக்கு பிறகு வீட்டிற்கு திரும்புவோரும் பாதிப்ைப சந்திக்கிறாரக்ள். அதேபோல் பள்ளி, கல்லூரிக்கு செல்வோரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் காலை, 9 மணிக்கு பிறகு மாலை வரை 86 டிகிரி(பாரன்ஹீட்) அளவிற்கு வெயில் இருக்கிறது.

மற்ற மாவட்டங்களிலும் இதேநிலையே உள்ளது. இவ்வாறு வெயில் வாட்டி வதைப்பதால் பகல் நேரங்களில் வெளியில் செல்வோரும் அவதிக்குள்ளாகின்றனர். சென்னையில் தற்போது ஏற்பட்டுள்ள தட்பவெப்பநிலை மாற்றத்தால் பொதுமக்கள் பலருக்கு உடல்ரீதியிலான தொந்தரவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக காய்ச்சல், சளி போன்றவற்றில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இதனால் ஆங்காங்குள்ள அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த தட்பவெப்பநிலை மாற்றம் வரும் பிப்ரவரி இறுதி வரை நீடிக்கும் என தெரிகிறது.