மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்துள்ளது. இதனால், நாடு முழுவதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. சிறிய பெட்டி கடைகள் முதல் பெரிய அளவிலான வர்த்தக நிறுவனங்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். வெளியூரில் இருந்து வந்து சென்னையில் தங்கியுள்ள வாலிபர்கள், தொழிலாளர்கள் ஓட்டலில் சாப்பிட முடியாமல் தவிக்கின்றனர். கையில் பணம் இருந்தும், அதை செலவு செய்ய முடியாமல் உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் அனைத்து வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மணப்பாறை மாட்டுச் சந்தையில் இன்று ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பால் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாமல் போனது. இதனால், மாடுகளை வாங்க வந்தவர்கள், 1000 மற்றும் 500 நோட்டுகளை கொண்டு சென்றதால், வியாபாரிகள் அந்த பணத்தை வாங்கவில்லை. இதையொட்டி ரூ.1 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.