சிவகங்கை
 
கிராமப்புற மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பையில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டு வந்தது. இதன் பணிகள் முடிவடைந்ததையடுத்து மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடைப்பெற்றது. 

இந்த விழாவிற்கு தமிழக கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன் தலைமை தாங்கி கால்நடை மருத்துவமனையை திறந்துவைத்தார். செந்தில்நாதன் எம்.பி. முன்னிலை வகித்தார்.

பின்னர் இந்த விழாவில் அமைச்சர் பாஸ்கரன், "கிராமப்புற மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தனிக் கவனம் எடுத்து பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை மக்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

விவசாயிகள் மற்றும் மக்கள் கறவை மாடு, ஆடுகளை வளர்ப்பதன்மூலம் போதிய பொருளாதார முன்னேற்றத்தை அடையலாம். எனவே, விவசாயிகள் வேளாண்மை பணிகளை செய்து வருவதுடன், கால்நடை வளர்ப்பை ஒரு இணைப்பு தொழிலாக செய்வதன் மூலம் போதிய வருமானத்தை பெறலாம். 

மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப சிங்கம்புணரி அருகே புழுதிப்பட்டியில் புதிய கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் பேசினார்.

இந்த விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் கருணாகரன், உதவி இயக்குனர் முகமதுநாசர், உதவி பொறியாளர் கண்ணன், அ.தி.மு.க. நகர செயலாளர் இப்ராம்ஷா, ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், 

முன்னாள் ஒன்றிய செயலாளர் நாகராஜ், நெற்குப்பை பேரூராட்சி முன்னாள் தலைவர் சஞ்சீவி, திருப்பத்தூர் ஒன்றிய முன்னாள் தலைவர் சிதம்பரம், ஜெ.பேரவை நேரு, முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.