தேனி
 
60 ஆண்டுகள் பழமையான கோயில்களை இடிக்க வருவாய்த்துறை திட்டமிட்டுள்ளதாகவும், அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். 

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி தலைமை வகித்தார். 

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வருவாய் அலுவரிடம் கொடுத்தனர். 

இந்தக் கூட்டத்தில் மொத்தம் 256 மனுக்கள் பெறப்பட்டன. 

இந்தக் கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் மனு ஒன்றை அளித்தார். அதில், "தேவதானப்பட்டி ஊருக்கு பின்புறம் தேசிய நெடுஞ்சாலை கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வந்தது. 

நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்ற இந்த சாலையில் இணைப்புச் சாலைகளாக ஜெயமங்கலம் சாலை, எருமலைநாயக்கன்பட்டி சாலை, தேவதானப்பட்டி சாலை ஆகியவை உள்ளன. 

இணைப்புச் சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயலும்போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 1½ ஆண்டில் 20–க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இங்கு விபத்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் கூறியிருந்தனர்.

இதில், தாடிச்சேரியைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், "தங்கள் ஊரில் புதிய கோவில் கட்டும் பணிக்கு சிலர் இடையூறு செய்து வருகின்றனர். மேலும், தற்போது 60 ஆண்டுகள் பழமையான கோயில்களை இடிக்க வருவாய்த்துறை திட்டமிட்டுள்ளதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவதுடன் இடையூறு செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" கூறியிருந்தனர்.