Asianet News TamilAsianet News Tamil

ஊருக்குள் முகாமிட்டுள்ள காட்டு யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை...

People request to take action against the wild elephant camping in the town ...
People request to take action against wild elephant camping in the town ...
Author
First Published May 14, 2018, 10:14 AM IST


நீலகிரி

நீலகிரியில் ஊருக்குல் முகாமிட்டுள்ள காட்டு யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பரவலாக தொடர் மழை பெய்து வருவதால் வனப்பகுதியில் கோடை வறட்சி நீங்கி பசுமை திரும்பி உள்ளது. 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வனத்தில் பசுந்தீவனம், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் காட்டு யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவை ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்றன. 

நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பாடந்தொரை அருகே அங்கன்கல்லேரி பகுதியில் காட்டு யானை ஒன்று நுழைந்தது. பின்னர் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. அப்போது அதே பகுதியை சேர்ந்த விவசாயி குஞ்சு கிருஷ்ணன் (41) என்பவரது வீட்டை காட்டு யானை இடித்து சேதப்படுத்தியது. 

இரவு காவல் பணிக்காக குஞ்சு கிருஷ்ணன் தனது தோட்டத்துக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவரது குடும்பத்தினர் இருந்தனர். அப்போது காட்டு யானை வீட்டை சேதப்படுத்தும்போது குஞ்சு கிருஷ்ணனின் மனைவி மாலதி (37) மீது தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இதில் அவர் காயம் அடைந்தார். 

உடனடியாக அவர் சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின்னர் அப்பகுதி மக்கள் காட்டு யானையை விரட்டியடித்தனர்.

இதேபோல கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட ஆரோட்டுப்பாறை பகுதியில் மற்றொரு காட்டு யானை முகாமிட்டு அப்பகுதியில் வாழை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை தின்று சேதப்படுத்தியது. 

இதில் பாக்கியராஜ், ராஜி, அன்பரசு, ராஜேந்திரன் ஆகிய விவசாயிகளின் 200–க்கும் மேற்பட்ட பாக்கு, வாழைகள் நாசமானது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். 

காட்டு யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios