நீதிபதி கர்ணனை கைது செய்யக் கூடாது என வலியுறுத்தி, அவரது சொந்த ஊரான  கடலூர் மாவட்டம் கர்நத்தம் கிராமத்தில் மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே உள்ள கர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் நீதிபதி கர்ணன். சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்தவர், தற்போது, கொல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சக நீதிபதிகள் மீது ஊழல் குற்றம்சாட்டிய கர்ணன் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாங்களாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி கர்ணன் எந்த ஒத்துழைப்பும் அளிக்காததால், அவருக்கு  6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தனர்.

இதையடுத்து கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் சென்னை வந்துள்ளனர். அவரை கைது செய்வதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தகவலை  அறிந்த நீதிபதி கர்ணனின் சொந்த கிராமமான கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையை அடுத்த கர்நத்தத்தில், பொது மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினர். 

பின்னர், நீதிபதி கர்ணனின் தம்பி வழக்குரைஞர் அறிவுடையநம்பி தலைமையில், 100-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள அம்பேத்கர் சிலை அருகே கூடி கையில் கருப்புக் கொடி மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி நீதிபதி கர்ணனை கைது செய்யக்கூடாது என ஆர்ப்பாட்டம் நடத்தினர்.