people protest for asking Water

சேலம்

சேலத்தில் தண்ணீர் கேட்டு பலமுறை பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்து நொந்துபோன மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியம், பெரியேரிப்பட்டி கிராமத்தில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட சிறு கிராமங்கள் உள்ளன. இதில் வேடப்பட்டி பகுதியும் அடங்கும். இங்கு சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்தப் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக இரண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு 20 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பயன்படுத்தப்படாததால் பழுதடைந்து வருகிறது.

இந்த நிலையில், வேடபட்டி கிராமத்திற்கு தனியாக குழாய் அமைத்து காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், அந்தப் பகுதிக்கு தண்ணீர் வரும் குழாய் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பழுதடைந்து விட்டது.

பழுதான குழாயை சரி செய்து குடிநீர் வழங்குமாறு அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியர், ஓமலூர் ஒன்றிய அதிகாரிகள், கிராம ஊராட்சி செயலர் உள்பட அனைவரிடமும் புகார் மனுக்கள் அளித்துள்ளனர். ஆனால், தண்ணீர் விநியோகம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், அப்பகுதி மக்கள் கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் இல்லாமல், பல்வேறு கிராமங்களுக்குச் சென்று தண்ணீர் எடுத்துவந்து பயன்படுத்துகின்றனர்.

மிகுந்த சிரமத்தை அனுபவிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், ஓமலூர் - சங்ககிரி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த தாரமங்கலம் காவலாளர்கள், மக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, "அதிகாரிகளிடம் பேசி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டதால் மறியலைக் கைவிட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.