சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி பள்ளிச்சந்தை புதூரில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அகழ்வாய்வு பணி நடைபெற்று வந்தது.

மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் கே.அமர்நாத் தலைமையில் இப்பணி முழுவீச்சில் நடைபெற்று வந்தன. தமிழர்களின் 5000 ஆண்டுகள் பழையான வரலாற்று ஆதாரங்கள் இதில் கண்டுபிடிக்கப்பட்டன. 

10 ஏக்கர் பரப்பளவு உள்ள தொல்லியல் மேட்டில் ஒரு ஏக்கர் பரப்பளவில் மட்டும் 102 அகழ்வாய்வுக் குழிகளில் சுமார் 5300 தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. இதுவரை இரண்டு கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. கடந்த மாதம் அமர்நாத் திடீரென அசாமுக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மத்திய தொல்லியல் துறையின் இந்த நடவடிக்கை அரசியல் கட்சியினரிடையேயும், தமிழ் ஆர்வலர்களிடையேயும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பண்டைய நாகரீகங்களை வெளி கொண்டு வரக்கூடாது என்ற உள்நோக்கத்துடன்தான்  நிச்சயம் அமர்நாத்தை மத்திய தொல்லியல் துறை பணியிட மாற்றம் செய்திருப்பதாக தமிழ் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில்  அகழ்வாராய்ச்சி நடைபெற்ற கீழடியை பார்வையிட மத்திய அமைச்சர்கள் மகேஷ் சர்மா, நிர்மலா சீத்தாராமன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர் வந்தனர்.

அப்போது பொது மக்கள் மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் கே.அமர்நாத்தை இட மாற்றம் செய்தததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பொது மக்களுக்கும் போலீசாருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டது.இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.