பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டிருப்பது அப்பட்டமான துன்புறுத்தல் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை விமர்சித்து தனது யூடியூப் சேனலில் வீடியோகளைப் பகிர்ந்து வருகிறார். குறிப்பாக திமுக மற்றும் தமிழக அரசின் குறைகளை அம்பலப்படுத்துவதையே பிரதானமாக செய்து வந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே அவதூறாகப் பேசி தன்னிடம் ரூ.2 லட்சம் பறித்ததாக சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா கடந்த மாதம் சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கருக்கு எதிராக புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் சவுக்கு சங்கரை காவல் துறையனர் இன்று காலை கைது செய்தனர்.

முன்னதாக அவரது வீட்டை சுற்றி வளைத்த நிலையில், உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டினுள் அமர்ந்திருந்த சவுக்கு சங்கரை காவல் துறையினர் கைது செய்தனர். கைது தொடர்பாக சவுக்கு சங்கர் வெளியிட்ட வீடியோ தற்போது பேசுபொருளாகி உள்ளது.

இந்நிலையில் சவுக்கு சங்கர் கைதுக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் சவுக்கு சங்கரின் யூடியூப் பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்யவில்லை, அவரை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் அடுத்தடுத்து ஒருவர் கைது செய்யப்படுவது அப்பட்டமான துன்புறுத்தல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…