People petition to take serious action to prevent dengue fever

ஈரோடு

ஈரோட்டில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டும், சிலர் உயிரிழந்தும் உள்ளனர். பரவி வரும் டெங்குவைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் மக்கள் மனு கொடுத்தனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கினார். மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கொடுத்தனர். அதில் சில மனுக்கள் இங்கே.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே கனகபுரம் காங்கேயம்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், ‘‘கடந்த ஒரு ஆண்டாக எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. அருகில் உள்ள விவசாய தோட்டத்தில் இருந்து தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வந்தோம். அங்கும் தண்ணீர் இல்லாததால் குடிநீருக்கு பெரும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தி குடிநீர் வசதி செய்து கொடுக்க ஆவன செய்ய வேண்டும்’’, என்று கூறப்பட்டு இருந்தது.

ஈரோடு பெரியவலசு பகுதியைச் சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், “பெரியவலசு நால்ரோடு பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. அங்கு டாஸ்மாக் சாராயக் கடை செயல்பட்டு வருவதால் பள்ளிக்கூடங்கள், கல்லூரிக்குச் சென்று வரும் மாணவிகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. கோவில், கடை, வீடுகளின் வாசல்களிலேயே குடிகாரர்கள் குடித்துவிட்டு அரைகுறை ஆடைகளுடன் விழுந்து கிடக்கிறார்கள்.

கடந்த மே மாதம் 16–ஆம் தேதி மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக கடை மூடப்பட்டது. பின்னர் 10 நாட்கள் கழித்து மீண்டும் டாஸ்மாக் கடை காவல் பாதுகாப்புடன் திறக்கப்பட்டு உள்ளது.

பா.ம.க. சார்பில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கையெழுத்து இயக்கம், தெருமுனை பிரசாரம் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. எனவே மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத டாஸ்மாக் சாராயக் கடையை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரசு கட்சியின் தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமையில் மக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், ‘‘ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, சென்னிமலை, கௌந்தப்பாடி உள்ளிட்ட பகுதியில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சிலர் உயிரிழந்தும் உள்ளனர். எனவே ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுதலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’, என்று கூறப்பட்டு இருந்தது.

அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் என்.ஆர்.வடிவேல் தலைமையில் கொடுத்த மனுவில், ‘‘கொடுமுடி அருகே இச்சிப்பாளையத்தில் சுமார் 4 ஏக்கர் மந்தைவெளி புறம்போக்கு நிலம் பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் உள்ளது. இந்த நிலத்தை அருகில் உள்ள தாமரைப்பாளையம், வாழநாயக்கன்பாளையம், பனப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏழை கூலித்தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டாவாக வழங்க வேண்டும்’’, என்று கூறியிருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள், மக்கள் பங்கேற்றனர்.