ஊட்டி,

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஊட்டியில் நேற்று அ.தி.மு.க.வினர் மொட்டையடித்தனர்.

தமிழகம் முழுவதும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, அதிமுகவினர் உள்பட பொதுமக்களும் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஊட்டியில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 100–க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் உள்பட பொதுமக்களும் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர். அப்போது கூடியிருந்த தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.ஆர்.அர்ஜூனன் எம்.பி. தலைமையில் சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து அ.தி.மு.க.வினர் மௌன ஊர்வலமாக காபி ஹவுஸ் சந்திப்பு பகுதிக்கு வந்தனர். இதில் சாந்திராமு, எம்.எல்.ஏ. மாவட்ட அவைத் தலைவர் தேனாடு இலட்சுமணன், கப்பச்சி வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஊட்டி காபி ஹவுஸ் சந்திப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், ஊர்வலத்தில் பங்கேற்ற ஆட்டோ ஓட்டுநர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோரும் ஜெயலலிதா உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த ஊர்வலத்தை முன்னிட்டு நகர காவல் துணை சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் விநாயகம் ஆகியோர் தலைமையில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.