காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற திருடனை மக்கள் அடித்துக் கொன்றனர். திருடன் யாரென்று தெரியாததால் அந்தப் பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த காந்தலூர் கிராமம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலு. கூலி வேலை செய்து வருகிறார். 

பாலு தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னையிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பார்த்து வருகிறார். இதற்காக பாலுவும் சென்னை சென்றுள்ளார். 

இந்த நிலையில், நேற்று காலை பாலுவுடைய வீட்டின் பூட்டை ஒருவர் உடைத்துக் கொண்டிருப்பதை அந்த பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதனையடுத்து அந்த நபரை கையும் களவுமாகப் பிடித்த கிராம மக்கள், அவரை கண் மூடித்தனமாக அடித்துள்ளனர். 

இதில், அந்த திருடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த செங்கல்பட்டு கிராமிய காவல் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்த அந்த திருடனின் உடலை மீட்டனர். 

பின்னர், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். 

மக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டவர் சுமார் 25 வயது மதிக்கத்தக்கவர். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து எந்த விவரமும் தெரியவில்லை.