People held in road block protest Request to remove dried waste ...

திருப்பூர்

ராஜவாய்க்கால் கரையில் தூர்வாரப்பட்டு கொட்டப்பட்ட சாக்கடை கழிவுகளை அகற்ற கோரி தாராபுரம் – திருப்பூர் சாலையில் மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் உள்ள அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு, விரைவில் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

கடைமடை பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தற்போது பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தாராபுரம் நகர்பகுதியை கடந்து செல்லும் ராஜவாய்க்காலை பொதுப்பணித் துறையினர் தூர்வாரி வருகின்றனர்.

வாய்க்காலில் சேர்ந்துள்ள கழிவுகள் அகற்றப்பட்டு, வாய்க்காலின் இருகரைகளிலும் கொட்டப்படுகிறது. கழிவுகளிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் வாய்க்கால் கரையோரங்களில் உள்ள வீடுகளில் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், கழிவுகளை அப்புறப்படுத்தாமல் இருப்பதால் சுகாதாரகேடு ஏற்பட்டு தொற்றுநோய்கள் பரவி வருகிறது என்றும் ஜின்னா மைதானம் பகுதியைச் சேர்ந்த மக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தூர்வாரப்பட்ட கழிவுகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் தாராபுரம் – திருப்பூர் சாலையில் அரசமரம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது காவலாளர்களிடம், மக்கள், “ராஜவாய்க்கால் நகர்பகுதியை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் கடந்து செல்லுகிறது. நகர்பகுதியிலிருந்து வெளியேறும் அனைத்து கழிவுநீரும் ராஜவாய்க்காலில்தான் விடப்படுகிறது.

பாசனத்திற்கு வாய்க்காலில் தண்ணீர் செல்லாததால் கழிவுநீர் வாய்க்காலில் தேங்கி நின்றுவிடுகிறது. இதனால் வாய்க்காலில் சகதி உருவாகி விடுகிறது. வாய்க்கால் தூர்வாரும் போது கழிவு நீர் சகதிகளை அள்ளி, வாய்க்காலின் இருகரைகளிலும் கொட்டி விடுகிறார்கள். பிறகு அதை அப்புறப்படுத்துவது கிடையாது.

இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு, நகர்பகுதியில் குறிப்பாக வாய்க்காலை ஒட்டியுள்ள பகுதிகளில் தொற்று நோய்கள் பரவி வருகிறது. தற்போது ஜின்னா மைதானம் பகுதியில் பல குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் கழிவுநீர் சகதியிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் வீடுகளில் குடியிருக்க முடியவில்லை.

இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கையும் எடுக்காததால் சாலைமறியல் போராட்டத்தை நடத்தினோம்” என்று அவர்கள் கூறினர்.

அப்போது, “பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று காவலாளர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.