திருவண்ணாமலை

கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததால் திருவண்ணாமலையில் அரசு நகர பேருந்தைச் சிறைபிடித்து மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா நெற்குணம் கிராமத்தில் மேட்டுப்பகுதிக்கு கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

மேலும், அந்தக் கிராமத்தை சேர்ந்த சிலர் அனுமதியின்றி புதிதாக குழாய் இணைப்புகளை ஏற்படுத்தியுள்ளதால் குடிநீர் விநியோகம் நடக்கவில்லை.

இதனைக் கண்டித்து குடிநீர் கிடைக்காத பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வயலாமூரில் இருந்து வந்தவாசி நோக்கி வந்த அரசு நகர பேருந்தையும் அவர்கள் சிறைபிடித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தெள்ளார் காவல் உதவி ஆய்வாளர் அருண், தெள்ளார் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் காவலாளர்கள் விரைந்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

“குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க எடுக்கப்படும்” என்று உறுதி அளித்தனர்.

இதனையேற்று மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்

போராட்டத்திற்கு கிடைத்த பலனாக ஊராட்சி அலுவலர்கள் அந்த கிராமத்தில் அனுமதியின்றி எடுக்கப்பட்டிருந்த புதிய குழாய் இணைப்புகளைத் துண்டித்தனர்.