சிவகங்கை

சிவகங்கையில் டாஸ்மாக் சாராயக் கடையை அகற்ற வலியுறுத்தி போராடும் மக்கள் ஒன்பதாவது நாளில் தூக்கில் தொங்கி போராட்டம் நடத்தினர்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் நெடுஞ்சாலையோரத்தில் இருந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் சாராயக் கடைகள் மூடப்பட்டன. இதனையடுத்து மூடப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடைகளுக்கு பதில் கிராமப் புறங்களில் கடைகள் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பல்வேறு இடங்களில் தன்னெழுச்சியாக பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என அனைவரும் போராட்டத்தில் இறங்கினர். இதனால் சில இடங்களில் டாஸ்மாக் சாராயக் கடைகள் மூடப்பட்டன. ஆனால், இன்றுவரை பல இடங்களில் டாஸ்மாக் சாராயக் கடைகளுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறுகிறது.

இதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் சாராயக் கடைகளுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறுகிறது.

இந்த நிலையில் காரைக்குடி அருகே உள்ள மித்ராவயலில் டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். ஆனால் கடை அகற்றப்படவில்லை. இதனால் கடையை அகற்றக் கோரி மித்ராவயலைச் சேர்ந்த பெண்கள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மாதர் சங்கத்தினர் கடந்த 20ஆம் தேதி கடை முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கடை மூடப்படும் என்று கூறினர். ஆனால், கடையை அகற்ற எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாராய பாட்டில்களை குவித்து வைத்து, அதற்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி பாடியும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் கடைக்கும் மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து கடை முன்பு பாடை கட்டியும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு கடந்த எட்டு நாள்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் மக்கள் தொடர் போராட்டத்தை எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளவே இல்லை.

ஒரு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அங்கு டாஸ்மாக் சாராயக் கடை திறக்கக்கூடாது என்று நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில், மித்ராவயலில் கடந்த எட்டு நாள்களுக்கும் மேலாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும், கிராமமக்கள் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற கிராமச் சபை கூட்டத்திலும், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் மனு அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று மித்ராவயலில் ஒன்பதாவது நாளாக போராட்டம் நடைபெற்றது. மக்கள் தூக்குக் கயிறைக் கட்டி, அதில் தொங்கியவாறு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயலாளர் பாண்டித்துரை, நிர்வாகக்குழு உறுப்பினர் மணக்குடி சிதம்பரம், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கல்பனா, துணைச் செயலாளர் தேவத்தாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.