மாணவர்களுக்கு தொடர் விடுமுறை; சாரை சாரையாக வந்த மக்கள்; களைகட்டிய சுற்றுலாத்தலங்கள்!
தொடர் விடுமுறையால் தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களில் மக்கள் குவிந்தனர். கன்னியாகுமரி, ஊட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
தமிழ்நாட்டில் இப்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்னும் விடுமுறை முடிய 3 நாட்களே இருக்கும் நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலாத்தலங்களில் மக்கள் குவிந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைகளின் ராணியான ஊட்டிக்கு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் குடும்பத்துடன் மக்கள் வருகை புரிகின்றனர்.
இது தவிர வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் ஊட்டியில் குவிந்துள்ளனர். ஊட்டியில் தொட்டபெட்டா, பைக்காரா படகு இல்லம், தாவரவியல் பூங்கா, பைக்கார நீர்வீழ்ச்சி என அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு வருகின்றனர். ஊட்டியில் பகலிலும் குளிரான சூழ்நிலை நிலவி வருகிறது. மக்கள் குவிந்து வருவதால் ஊட்டியில் அனைத்து ஹோட்டல் ரூம்களும் நிரம்பி வழிகின்றன.
இதேபோல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் மக்களின் கூட்டம் அலைமோதியது. தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் குவிந்ததால் முருகப்பெருமானை தரிசிக்க நீண்ட நேரம் ஆனது. கடல் மற்றும் புனித தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடினார்கள். மேலும் மணப்பாடு, உவரி என திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதி தேவாலயங்களிலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
மேலும் முக்கிய சுற்றுலாத்தலமான ஒகேனக்கலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். ஒகேனக்கல் மெயின் அருவி, சினி பால்ஸ், காவரி ஆற்றில் குளித்த சுற்றுலா பயணிகள் படகு சவாரியும் செய்து மகிழ்ந்தனர். அங்குள்ள மீன் அருங்காட்சியகம், முதலைப்ண்னையையும் பார்வையியிட்டனர்.
இதுதவிர தமிழ்நாட்டின் முதன்மையான சுற்றுலாத் தலமான இந்தியாவின் தென்கோடி முனையில் உள்ள கன்னியாகுமரியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். அதிகாலையில் சூரிய உதயத்தை கண்டு ரசித்த மக்கள், படகு மூலம் விவேகானந்தார் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு சென்று பார்வையிட்டனர். பகவதி அம்மன் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகையால் கன்னியாகுமரி முழுவதும் களைகட்டியது. அங்குள்ள கடைகளில் விற்பனை அதிகரித்தால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பயணிகளின் தேவைக்கேற்ப கன்னியாகுமரிக்கு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.