People do not want to set up a bridal shop

திருப்பூரில் டாஸ்மாக் சாராயக் கடை அமைப்பதை எதிர்த்து தெருவில் பள்ளம் தோண்டி போராடிய மக்களை சமாதானம் செய்ய வந்த அதிகாரிகளிடம் சாராயக் கடை அமைக்கமாட்டோம்னு எழுதிக் கொடுங்கள் என்று கேட்டதற்கு, அதிகாரிகள் ஒரு முடியாது என்று திரும்ப சென்றுவிட்டனர்.

உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடைகள் அதிரடியாக மூடப்பட்டன.

அப்போது திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் எட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களில் திறக்க தற்போது அரசு சுடச்சுட நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே வாடகைக்கு கடைகளை டாஸ்மாக் சாராயக் கடை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தேர்வு செய்கின்றனர்.

இந்நிலையில், தாராபுரம் பகுதியில் சோளக்கடை வீதியில் உள்ள வண்டிப்பேட்டை பகுதியில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடை திறப்பதற்காக டாஸ்மாக் சாராயக் கடை அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தால், தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படும். மேலும், இந்த பகுதியில் வர்த்தக நிறுவனங்கள், கோவில், மசூதி மற்றும் பள்ளிக்கூடங்கள் போன்றவை இருப்பதால் மக்களும், மாணவ, மாணவிகளும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதனால் வண்டிப்பேட்டை பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடையை திறக்கக்கூடாது என்று டாஸ்மாக் சாராயக் கடை அலுவலர்களிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், மக்களின் கோரிக்கை இந்த அதிகாரிகளிடமும் எடுபடவில்லை. சாராயக் கடை அலுவலர்கள் “எவன் செத்தா எனக்கென்ன” என்ற முனைப்போடு சாராயக் கடை அமைக்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டனர்.

அதனால் கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் மக்கள் டாஸ்மாக் சாராயக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். அப்போது காவலாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், “மக்களின் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் சாராயக் கடையை திறக்கமாட்டோம்” தேன் வடிய பேசி அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

ஆனால், தற்போது மீண்டும் அதே இடத்தில் டாஸ்மாக் சாராயக் கடையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் சினம் கொண்ட கோட்டைமேடு மற்றும் சோளக்கடைவீதி மக்கள், அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டாஸ்மாக் சாராயக் கடைக்கு செல்லும் தனியாருக்கு சொந்தமான தெருவை (வண்டிப்பாதை) அடைக்கவும் முடிவு எடுத்தனர்.

இதற்கு, வண்டிப்பாதை இடத்தின் உரிமையாளரும், அந்தபகுதியில் உள்ள வர்த்தகர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று, டாஸ்மாக் சாராயக் கடை அமைய உள்ள பகுதிக்கு யாரும் செல்ல முடியாத வகையில், அந்த தெருவின் நடுவில் பள்ளம் தோண்டி போராட்டம் நடத்தினர். இதனால் அங்குள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்படவில்லை.

இதுபற்றி தகவலறிந்து வந்த அலுவலர்கள் அப்பகுதியில் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்கள். அதில், “டாஸ்மாக் சாராயக் கடையை திறக்க மாட்டோம்” என்று அதிகாரிகள் மீண்டும் உறுதியளித்தனர். ஆனால், இந்த முறை சுதாரித்துக் கொண்ட மக்கள் “நீங்கள் சொன்னதை எழுத்துப் பூர்வமாக கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம்” சாட்டை வீசினர்.

அதிகாரிகளால் அது முடியாதல்லவா அதனால் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியது: “எங்கள் பகுதி மட்டுமல்ல, சோளக்கடைவீதியை சுற்றியுள்ள எந்த இடத்தில் டாஸ்மாக் சாராயக் கடை திறந்தாலும், அதற்கு நாங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவிப்போம்” என்று அடித்துக் கூறினர்.