விழுப்புரம்

தமிழகத்தில் மீண்டும் தேர்தல் வருவதை மக்களும் விரும்பவில்லை. பாஜகவும் விரும்பவில்லை என்று பா.ஜ.க எம்.பி இல.கணேசன் சொன்னார்.

விழுப்புரம் மாவட்டத்தில், கம்பன் கழகம் சார்பில் கடந்த 4–ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த கம்பன் விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கம்பன் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதில் பா.ஜ.க. மூத்தத் தலைவரும், எம்.பி.யுமான இல.கணேசன் பங்கேற்றுப் பேசினார்.

அவர், செய்தியாள்ர்களிடம், “தமிழகத்தில் தற்போது அரசியல் சூழல் குழப்பமாகவே இருந்து வருகிறது. ஜெயலலிதா என்னும் மிகப்பெரும் ஆளுமை விட்டுச் சென்ற இடத்தை அக்கட்சியினரால் நிரப்ப முடியவில்லை.

தமிழகத்தில் மீண்டும் தேர்தல் வருவதை மக்களும் விரும்பவில்லை. பாஜகவும் விரும்பவில்லை. எனவே, தனித்தனியாக பிரிந்துள்ள அதிமுகவினர் இணைந்துச் செயல்பட்டு மீதமுள்ள நான்கு ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்ய வேண்டும். இதுதான் அவர்கள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு செய்யும் உண்மையான மரியாதை.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அதிமுகவினர் மத்திய சுகாதாகரத்துறை மந்திரி நட்டாவை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.

இதேபோல் நான் மற்றும் எங்களது கட்சியை சேர்ந்த மத்திய மந்திரிகளான நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரும் வலியுறுத்தியுள்ளோம்.

தமிழகத்திற்கு மட்டும் எப்படி விலக்கு அளிக்க முடியும், அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது நீட் என மத்திய அரசு நினைக்கிறது. தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளித்தால், சரியாக இருக்குமா? அதற்கு வேறு என்ன செய்யலாம்? என மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இருப்பினும், இந்த ஆண்டு மட்டுமாவது விலக்கு அளிக்க வேண்டும் என நான் வலியுறுத்தி உள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.