கடவுளின் தேசத்துக்கு இது அழகா?; தமிழ்நாட்டை குப்பைத் தொட்டியாக்கும் கேரளா; மவுனம் கலைப்பாரா ஸ்டாலின்?

தமிழ்நாட்டில் கேரளா தொடர்ந்து மருத்துவ கழிவுகளை கொட்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. 

People demand to stop dumping Kerala's medical waste in Tamilnadu ray

கடவுளின் தேசம் 

இயற்கை அன்னையின் மடியில் குடியிருக்கும் நமது அண்டை மாநிலமான கேரளாவை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஏனெனில் பர‌ந்து விரிந்த ஆறுகள், அரணாக நிற்கும் அழகமான மலைத்தொடர்கள், கண்களுக்கு விருந்தளிக்கும் அருவிகள், எங்கும் நிறைந்திருக்கும் மரங்கள் என பார்க்கும் யாவரையும் கடவுளின் தேசம் தனது அழகால் வசீகரித்து விடும். 

கேரளா தனது அழகை தொடர்ந்து பராமரித்து வருவதற்கு முக்கிய காரணம் அங்கு இயற்கையை பாதுகாக்கும் சட்டங்கள் தான். ஏனெனில் கேரளாவில் மரங்களை வெட்டுவதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டும். விதிகளை மீறீ மரங்களை வெட்டினால் பல ஆயிரக்கணக்கான ரூபாய் ஈட்டியாய் பாயும். இது தவிர ஆறுகளில் மணல் அள்ள, மலைகளை வெட்ட அனைத்துக்கும் கேரள அரசு தடைவிதித்துள்ளது.

இப்படி தன்னுடைய மாநிலத்தின் அழகை பொத்தி, பொத்தி பாதுகாத்து வரும் கேரள அரசு, சகோதர மாநிலமான தமிழ்நாடு எக்கேடு கெட்டுப்போனால் என்ன? என்ற நிலையில் செயல்பட்டு வருவதுதான் வேதனையின் உச்சமாகும். ஏற்கெனவே தமிழ்நாட்டில் சில அரசு அதிகாரிகளின் துணையுடன் இங்கு இருந்து மலைகளை வெட்டியும், ஆறுகளில் மணலை சுரண்டியும் லாரி, லாரியாக எடுத்துச் செல்லும் கேரளா இப்போது  தமிழ்நாட்டு மக்களின் உயிருடன் விளையாடும் ஆபத்தான செயலில் இறங்கி இருக்கிறது.

People demand to stop dumping Kerala's medical waste in Tamilnadu ray

மருத்துவ கழிவுகளை கொட்டும் கேரளா 

அதாவது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மையத்தின் மருத்துவ கழிவுகளை திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர் மற்றும் கோடகநல்லூர் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கொட்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் கழிவுகளை கொட்டுவது கேரளாவின் வழக்கம்தானே; இது என்ன முதன்முறையா என்று நீங்கள் கேட்கலாம்.

அரசும், அரசு அதிகாரிகளும் கண்டுகொள்ளாத காரணத்தினால் கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள், மீன் கழிவுகள், காய்கறி கழிவுகளை தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியில் கொட்டி வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக உயிருக்கு ஆபத்தான மருத்துவ கழிவுகளை தமிழ்நாட்டில் கேரளா கொட்டி வருவதுதான் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இந்த மருத்துவ கழிவுகளால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. தொடர்ந்து மருத்துவ கழிவுகள் கொட்டி வந்தால் அந்த இடமே மக்கள் வாழத்தகுதி இல்லத இடமாக மாறிப்போகும்.கேரளாவில் இத்தகைய கழிவுகளை கொட்டுவதற்கு அனுமதியில்லை. ஆகையால் தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து மிக எளிதாக மருத்துவ கழிவுகளை கொட்டி விட்டுச் செல்கின்றனர். 

கண்டுகொள்ளாத நெல்லை மாவட்ட ஆட்சியர் 

இப்படி கொடிய ஆபத்து இருந்தும் கூட மருத்துவ கழிவுகள் கொட்டியதை நெல்லை மாவட்ட ஆட்சியர் இத்தனை நாள் கண்டுகொள்ளாமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது தென்மண்டல பசுமைத்தீர்ப்பாயமும், மதுரை உயர்நீதிமன்றமும் கழிவுகள் கொட்டப்படுவதைக் கண்டித்த பிறகுதான், இனிமேல் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

People demand to stop dumping Kerala's medical waste in Tamilnadu ray

நெல்லை மாவட்டம் மட்டுமில்ல; கேரள எல்லையில் இருக்கக்கூடிய அனைத்து எல்லையோர மாவட்டங்களிலும் மற்ற மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சில நேரங்களில் கழிவுகள் ஏற்றி வரும் லாரிகளை மக்கள் சிறைபிடித்தால் காவல் துறையினர் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்கின்றனர். 

மவுனம் கலைப்பாரா ஸ்டாலின் ?

ஆனால் மற்ற நேரங்களில் கேரள கழிவு லாரிகள் ஹாயாக தமிழ்நாடுக்கு வந்து கழிவுகளை கொட்டி விட்டு டாட்டா காட்டி விட்டுச்செல்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சீமான் ஆகியோர் கேரள அரசை கண்டித்துள்ள நிலையில், அதிகாரத்தில் இருக்கக்கூடிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் இதுவரை வாய் திறக்கவில்லை.

இல்லம் தேடி மருத்துவம் போன்ற சிறப்பான மருத்துவ திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் நிலையில், மக்களின் உயிருக்கு ஊரு விளைவிக்கும் மருத்துவ கழிவுகள் உள்பட அனைத்து கழிவுகளையும் கேரளா கொட்டுவதை நிரந்தரமாக தடுத்து நிறுத்தக்கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நமது முதல்வர் ஸ்டாலின் இதுவரை வலியுறுத்தாதது அதிர்ச்சியாக உள்ளது.  ஆகவே தமிழக முதல்வர் உடனே நடவடிக்கை எடுத்து கேரளாவின் செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios