Asianet News TamilAsianet News Tamil

குடிநீர் கேட்டு அரசு பேருந்தை சிறைப்பிடித்த மக்கள்; சாலை மறியலால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு.

People captured government bus asking for water Traffic jam over 2 hours by road blockade
People captured government bus asking for water Traffic jam over 2 hours by road blockade
Author
First Published Apr 28, 2018, 9:56 AM IST


கரூர்

கரூரில், இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து அரசு பேருந்தை சிறைப்பிடித்தும், வெற்றுக் குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம் நெய்தலூர் ஊராட்சிக்குட்பட்ட சின்னப்பனையூரில் உள்ள சமத்துவபுரத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 

அந்தப் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு, ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு, அதன்மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு அப்பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த இரண்டு மாதமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். 

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொறுமை இழந்த அப்பகுதி மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் தலைமையில் வெற்றுக் குடங்களுடன்  போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்தனர்.

அதன்படி, நேற்று குளித்தலையில் இருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு சென்ற அரசு பேருந்தை சிறை பிடித்து காலை 7.30 மணி அளவில் சின்னப்பனையூர்  -  நங்கவரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நங்கவரம் வருவாய் ஆய்வாளர் கணேசமூர்த்தி, நெய்தலூர் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் கோவர்த்தனா மற்றும் குளித்தலை காவலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்கள் அதிகாரிகளிடம், "இரண்டு ஆழ்குழாய் கிணற்றிலும் மின் மோட்டார்கள் பழுதடைந்துள்ளன. இப்பகுதியில் உள்ள அடிபம்புகளும் வேலை செய்யவில்லை. இதனால் குடிக்கக்கூட தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். 

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், ஒன்றிய அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. அதனால் நாங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம்" என்றனர். 

அதனியத் தொடர்ந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், "குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். 

இந்த மறியல் போராட்டத்தால் சின்னப்பனையூர்  -  நங்கவரம் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios