அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயண அட்டை: இனி ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம்!
அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயண அட்டையை இனி ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ள தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வழங்கப்பட்டு வரும் பயணக் கட்டணச் சலுகை அனுமதிச் சீட்டுகளை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து, பயனாளிகள் பெற்றிட வழிவகை செய்யப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சட்டசபையில் அறிவித்தார்.
அந்த அறிவிப்பினை தொடர்ந்து, இத்திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு, பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு (PTCS) மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) நிறுவனத்துடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இணையதளம் வாயிலாக கட்டணமில்லா பயண அட்டையை பெற்றுக்கொள்ளும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில், முதற்கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இத்திட்டத்தினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்வின் போது, போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், ஆண்டுதோறும் 3,237 கண் பார்வை குறையுடையோர்கள், 1,468 மாற்றுத்திறனாளிகள், 1,180 அறிவுசார் குறைபாடுடையோர்கள், 117 சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள், வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் விருதாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு உரிய மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் (சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்), தமிழ் வளர்ச்சி இயக்ககம் எழும்பூர் ஆகிய அலுவலர்களின் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், கட்டணமில்லா பயண அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது ஆன்லைன் மூலம் கட்டணமில்லா பயண அட்டைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால், உரிய அலுவலகம் வந்து செல்லாமல் அவர்கள் தங்களது வீட்டில் இருந்தே பயண அட்டைகளை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். வீட்டின் அருகாமையில் உள்ள இ-சேவை மையத்தில் அல்லது tn.e.sevai என்ற வலைதளம் வாயிலாக விண்ணப்பித்து அதற்குரிய ரசீது பெற்றுக் கொள்ளவும், உரிய குறுஞ்செய்தி பெறப்பட்ட பின்பு பயண அட்டையை A4 Sheet (white / colour) / பிளாஸ்டிக் அட்டையில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.