திண்டுக்கல்

தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு கிராமத்து மக்கள் படையாக கிளம்பி குடிநீர் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமையில் நேற்று நடைப்பெற்றது.

அப்போது வறட்சியால் மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், குடிநீர் கேட்டு மனுவுடன் படையெடுத்து வந்த மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சாணார்பட்டி ஒன்றியம் ராகலாபுரம் கிராம மக்கள் குடிநீர் வழங்கக்கோரி மனு கொடுத்தனர். அதுபற்றி கிராம மக்கள் கூறியது:

“ராகலாபுரத்தில் 1100 மக்கள் வசித்து வருகிறோம். ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டது.

ஆனால், கடந்த எட்டு மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை. இதனால் ஒரு கி.மீ. நடந்து சென்று அருகில் உள்ள மற்றொரு கிராமத்தில் குடிநீர் எடுத்து வருவதால் சிரமமாக இருக்கிறது. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், என்றனர்.

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் அழகுபட்டி ஊராட்சி தெப்பக்குளத்துப்பட்டியை சேர்ந்த மக்கள் காலிக்குடங்களுடன் வந்து குடிநீர் கேட்டு மனு கொடுத்தனர். அதுபற்றி கிராம மக்கள் கூறியது:

“எங்கள் ஊரில் 500 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். மேல்நிலை தொட்டி மூலம் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும் 5 குடம் தான் குடிநீர் கிடைக்கிறது. அது போதுமானதாக இல்லாததால் சிரமப்படுகிறோம். இதற்கிடையே அழகுப்பட்டியில், சில்வார்பட்டி ஊராட்சிக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து எங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும், என்றனர்.

ஆத்தூர் ஒன்றியம் அம்பாத்துரை ஊராட்சி பெருமாள்கோவில்பட்டி மக்கள் குடிநீர் கேட்டு மனு கொடுத்தனர். கிராம மக்கள் கூறியது:

“எங்கள் கிராமத்தில் 1,500 மக்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் அனைத்து சாலைகளும் சேதமாகி விட்டன. எனவே குடிநீர், சாலை மற்றும் பொதுக்கழிப்பிட வசதி செய்து தரவேண்டும், என்றனர்.

வத்தலக்குண்டு அருகேயுள்ள கட்டகாமன்பட்டியை அடுத்த காமாட்சிபுரத்தை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், “எங்கள் கிராமத்தில் 500 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த 3 மாதமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யவில்லை.

ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டது. எனவே, புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தனர்.

நிலக்கோட்டை தாலுகா பள்ளப்பட்டி ஊராட்சி முத்தையர்தெரு மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் தெருவில் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. ஆழ்துளை கிணறுகள் அனைத்தும் வறண்டு விட்டன. எனவே, பழைய ஆழ்துளை கிணறுகளை தூர்வாரி ஆழப்படுத்தி, குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பாலகிருஷ்ணாபுரம் பாப்புலர்நகரை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், பாப்புலர்நகரில் மதுபானக்கடை மூடப்பட்ட இடத்தில் இருந்து ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தாமதம் ஆனால் தண்ணீர் எடுக்கும் இடத்தை முற்றுகையிடுவோம் என்று கூறப்பட்டுள்ளது.

பழனி மேல்கரை ஊராட்சி சந்தன்செட்டிவலசு கிராம மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் வந்து தங்கள் கிராமத்தில் குடிநீர், மயானம், வீட்டுமனை பட்டா மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரவேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.

பழனியை அடுத்த அ.கலையம்புத்தூர் ஊராட்சி 3–வது வார்டில் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று, தங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50–க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் பழனி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபு பாண்டியன், பழனி தாலுகா உதவி ஆய்வாளர் பழனிச்சாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.