திருவள்ளூர்

திருவள்ளூரில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதித்தது.

திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூரை அடுத்த எண்ணூர் நேரு நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் சாராயக் கடை அமைக்கப்பட்டது.

அதற்கு அப்பகுதி மக்கள் டாஸ்மாக் சாராயக் கடையை திறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடையை திறக்க ஊழியர்கள் வந்தனர்.

இதனைப் பார்த்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கோவில், பள்ளிக்கூடங்கள் உள்ள குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடையை திறக்கக்கூடாது என்று கூறி சாராயக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் எண்ணூர் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றனர்.

இந்தப் பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடையைத் திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று அவர்கள் மக்களிடம் உறுதியளித்தனர்.

இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.