வாணாபுரம்,

வாணாபுரத்தில் முறையான குடிநீர் விநியோகம் இல்லாததால், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தண்டராம்பட்டை அடுத்த வாணாபுரத்தில் காட்டுவாமரம், பள்ளி வளாகம், பழைய மாநில வங்கி வளாகம், கள்ளக்குறிச்சி சாலை, திருவண்ணாமலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த சில வாரங்களாக வாணாபுரம் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவது இல்லை. இதனால், பொதுமக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் தெரு குழாய்களில் குடிநீர் வரும் என்று பொதுமக்கள் குழாய் மீது விழி வைத்துக் காத்திருந்தனர். ஆனாலும், குடிநீர் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு கள்ளக்குறிச்சி – திருவண்ணாமலை காலி குடங்களை சாலையில் வரிசையாக வைத்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தையும் சிறைப் பிடித்தனர். இதுகுறித்து, தகவல் அறிந்த வாணாபுரம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவலாளர்கள் கூறினர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் சிறைபிடிக்கப்பட்ட அரசு பேருந்தையும் விடுவித்தனர்.

இந்த சாலை மறியல் காரணமாக கள்ளக்குறிச்சி – திருவண்ணாமலை சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்புடன் காணப்பட்டது.