Passengers ran by temporary bus drivers 4th Day of the Struggle ...

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 4-வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசு பேருந்துகளை இயக்கும் தற்காலிக ஓட்டுநர்களை கண்டு பேருந்தில் பயணிகள் ஏறாமல் தெறித்து ஓடுகின்றனர்.

ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களைச் சேர்ந்த அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் நீடித்தது.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நடைப்பெற்றது. இருப்பினும் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் போக்குவரத்து துறையினர் தற்காலிக ஊழியர்களை பயன்படுத்தி பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.

மேலும், போக்குவரத்து துறையினர் மக்களின் வசதிக்காக வேலூர் மண்டலத்தில் உள்ள ஓட்டுனர் பயிற்சி பள்ளி பேருந்தையும் பயன்படுத்தினர். தற்காலிக ஓட்டுநர்களில் சிலருக்கு சரிவர அரசு பேருந்துகளை இயக்க தெரியாதாம்.

நேற்று திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் வேலூர் செல்லும் அரசு பேருந்தை இயக்கிய தற்காலிக ஓட்டுநர்கள் அதனை பின்னோக்கி இயக்கு மிகவும் சிரமப்பட்டனர்.

மேலும், பணியில் இருக்கும் தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள் சீருடை அணியாமல் சாதாரண உடையிலேயே காணப்பட்டனர். சீருடை அணியாமல் இருக்கும் தற்காலிக பேருந்து ஓட்டுநர்களை கண்டதும் பயணிகள் பேருந்தில் ஏறி பயணம் செய்ய அச்சப்பட்டு இறங்கிவிடுகின்றனர்.

மேலும், தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் எதிரொலியாக திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது.

வேலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டன. பெங்களூரு, சேலம், திருச்சி, மதுரை போன்ற பகுதிகளுக்கு குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்பட்டது.

பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அவை தற்காலிக ஓட்டுநர்களால் இயக்கப்படும் காரணத்தினால் பயணிகள் அவற்றை தவிர்த்து வருகின்றனர்.