Asianet News TamilAsianet News Tamil

முன்பதிவு இல்லாத விரைவு இரயில்கள் இயக்க இரயில்வே துறைக்கு பயணிகள் கோரிக்கை; நிறைவேற்றப்படுமா?

Passenger requests for the Railway sector to run non-reserved express Trains
Passenger requests for the Railway sector to run non-reserved express Trains
Author
First Published Feb 22, 2018, 8:15 AM IST


விருதுநகர்

தென்மாவட்டங்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருவுக்கு உட்காரும் வசதி மட்டும் கொண்ட முன்பதிவு இல்லாத விரைவு இரயில்களை தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரயில் பயணிகள் மற்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பல்வேறு விரைவு இரயில்கள் இயக்கப்பட்டாலும் அந்த இரயில்களில் முன்பதிவு கிடைப்பது அரிதாகவே உள்ளது.

பேருந்து கட்டணம் அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளதால் இரயில் பயணத்திற்கு பலரும் மாறியுள்ளனர். இதனால் நெடுந்தூர விரைவு இரயில்களில் முன்பதிவு கிடைப்பது குதிரை கொம்பாய் இருக்கிறது.

தென்மாவட்ட மக்கள் நெடுந்தூர இரயில்களில் முன்பதிவு கிடைக்காமல் தவிக்கின்றனர். ஒவ்வொரு விரைவு இரயிலிலும் 18-க்கும் மேற்பட்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தாலும் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்வதற்கு அதிகபட்சமாக மூன்று பெட்டிகளே உள்ளன. இதனால் அந்த இரயில் பெட்டிகளில் பெரும்பாலானோர் உட்காருவதற்கு கூட இடமில்லாமல் தவிக்கின்றனர். குறிப்பாக பெண்களும், முதியவர்களும் முன்பதிவு இல்லாத இரயில் பெட்டிகளில் பயணம் செய்வது பெரும் சிரமத்தை ஏற்படுத்துகின்றது.

பல தருணங்களில் முன்பதிவு செய்யாதோர் முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணம் செய்ய முயற்சிப்பதால் இரயில்வே அதிகாரிகளுக்கும் அவர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது.

முன்பதிவு இல்லாத இரயில் பெட்டிகளிலும் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு நிற்க வேண்டிய நிலை இருப்பதால் பயணிகளுக்கு இடையேயும் பிரச்சனை வெடிக்கிறது.

மேலும், இரயில்வேத்துறையின் டிக்கெட் பரிசோதகர்களும் முன்பதிவு இல்லாத இரயில் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் டிக்கெட்டுகளை பரிசோதனை செய்வதற்கு முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே, அதிகரித்து வரும் இரயில் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கு முழுமையான முன்பதிவு இல்லாத விரைவு இரயில்கள் இயக்க வேண்டும்.

உட்காரும் வசதி மட்டும் கொண்ட இரயில்கள் இயக்கப்பட்டால் தென்மாவட்டங்களில் உள்ளோர் அதிகமாக பயன்பெறும் நிலை ஏற்படும். இரயில்வேத்துறைக்கும் வருவாய் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.

எனவ, "தெற்கு இரயில்வே நிர்வாகம் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருவுக்கு உட்காரும் வசதி மட்டும் கொண்ட முன்பதிவு இல்லாத விரைவு இரயில்களை தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தென் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளும் முன்பதிவு இல்லாத இரயில்கள் இயக்க வேண்டியதன் அவசியத்தை இரயில்வே அமைச்சகத்திடமும், தெற்கு இரயில்வே நிர்வாக அதிகாரிகளிடமும் வலியுறுத்தி இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.  

 

Follow Us:
Download App:
  • android
  • ios