மாணவர்களே , பெற்றோர்களே தேர்வில் தோல்விஒயும் மதிப்பெண்ணும் மட்டும் வாழ்க்கையல்ல ...மனச்சோர்வு இருந்தால் 104 க்கு போன் செய்யுங்கள்... ஆலோசனை பெறுங்கள் ...

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாவதை ஒட்டி தேர்வில் தோல்வி அடையும் , குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் தவறான முடிவை நாடாமல்  இருக்க அவர்களுக்கு ஆலோசனை வழங்க 104 சேவையை தமிழக சுகாதார துறை  அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வை 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருக்கின்றனர்.  பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில்  பிளஸ்டூ தேர்வில் அதிக மதிப்பெண்களை எதிர்ப்பார்க்கும் மாணவர்கள் , தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள்  தற்கொலை போன்ற தவறான முடிவை மேற்கொள்கின்றனர். 

தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் தவிர , மதிப்பெண் குறைவாக பெற்ற மாணவ மாணவியர்  பெற்றோர் , அக்கம் பக்கத்தார்  ஏளன பேச்சுக்கு ஆளாவதால் மனச்சோர்வு அடைகின்றனர். இது போன்ற நேரங்களில் சட்டென்று உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவை நொடிப்பொழுதில் எடுக்கின்றனர்.

தேர்வில் தோல்வி அடைவதும் , அதிக மதிப்பெண் பெறாமல் போவதாலும் வாழ்க்கையே முடிந்து போனது என்ற எண்ணமே இது போன்ற விரும்பத்தகாத முடிவெடுக்க காரணமாக அமைகிறது. இதை தவிர்க்க மாணவர்கள் , பெற்றோர்  தயக்கமில்லாமல் அரசின் 104 சேவையை அழைக்கலாம் என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

கடந்த 2014 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இச்சேவையானது மூன்றாண்டுகளாக மாணவர்களுக்கு பெற்றோர்களுக்கு வழிகாட்டி வருகிறது. உளவியல் ஆலோசகர்கள்  , மருத்துவர்கள் ஆலோசனை 24 மணி நேரமும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இதுவரை  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலை எண்ணத்திலிருந்து ஆலோசனை மூலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் 104 சேவை மேலாளர் பிரபுதாஸ்.

தேர்வில் தோல்வி அடைந்தால் அதற்கு பின்னர் வாழ்க்கையே இல்லை என்று யாரும் நினைக்ககூடாது , வாழ்க்கையை தைரியத்துடன் எதிர் கொள்ளவேண்டும் , ஆகவே தேர்வு முடிவு காரணமாக மனச்சோர்வு இருந்தால் தயக்கமின்றி அழையுங்கள் தகுந்த ஆலோசனை தருகிறோம் என்கிறார்  104 சேவை உளவியல் ஆலோசகர் இளையராஜா.

தமிழகத்தின் பிரபலமான முதல்வர்கள் காமராஜர் , எம்ஜிஆர் , கருணாநிதி , ஜெயலலிதா போன்றோர் பள்ளிப்படிப்பை தாண்டாதவர்களே...சச்சின் டெண்டுல்கர் முதல் பல சாதனையாளர்கள் பட்டதாரிகள் இல்லை.

வாழ்க்கையை எதிர்கொள்வோம் , சாதிப்போம் ...தேர்வுக்கு பின்னர் 104 அழைப்புகள் தான் வரவேண்டும் 108 அழைப்புகள் அல்ல என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.