தனக்கு வந்த பெரும்பாலான தொலைபேசி அழைப்புகளில் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்க சொல்லியே பொதுமக்கள் கருத்துத் தெரிவித்தனர் என்று நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ தங்கதுரை தெரிவித்தார்.
நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த தங்கதுரை எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
இவர், சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளார். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கிளப்பிவிடப்பட்டது.
இதன் விளைவு நிலக்கோட்டை சட்டமன்ற அலுவலகத்திற்கும், அவரது வீட்டுக்கும் காவல் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 12 நாட்களுக்கு பிறகு நேற்று அவர் நிலக்கோட்டை வந்தார். அவருக்கு காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தங்கதுரை எம்.எல்.ஏ.வுடன் 10–க்கும் மேற்பட்ட காவலாளர்கள் உடன் வந்தனர்.
நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அவரிடம், எடப்பாடி பழனிசாமியை ஆதரித்ததற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது, “முகநூலில் பொதுமக்கள் தெரிவித்த கருத்தின் படியே எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தேன். தனக்கு வந்த பெரும்பாலான தொலைபேசி அழைப்புகளில் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்க சொல்லியே பொதுமக்கள் கருத்துத் தெரிவித்தனர்” என்றார்.
பொதுமக்கள் எதிர்ப்பு இல்லையென்றால் காவல் பாதுகாப்பு எதற்கு என்றும், முன்பெல்லாம் பாதுகாப்பு அளிக்கவில்லையே என்றம் கேள்வி கேட்டதற்கு, “ஜெயலலிதா விட்டு சென்ற நலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்றவே காவல் பாதுகாப்பு என்றும், லும் முன்பெல்லாம் காவலாளர்களை பாதுகாப்புக்கு அழைக்கவில்லை. தற்போது அழைத்திருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
மேலும் மதுரையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிருபரை திடீரென்று கத்தியால் குத்திவிட்டார்கள். அதனால் போலீசார் உங்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்புக்காக வந்துள்ளார்கள் என்றார்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட எம்.எல்.ஏ.வின் காருக்கு முன்னும், பின்னும் காவல் வாகனங்கள் சென்றன.
