jallikattu:ஆள்மாறாட்டம் செய்து விளையாடிய இளைஞர்கள்.. அதிரடியாக வெளியேற்றிய அமைச்சர்.. ஜல்லிக்கட்டில் சம்பவம்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் இருந்த வீரர்கள் முறைகேடாக விளையாடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாலமேட்டின் முடுவார்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் எண் 17 என்பவர் 8 காளைகளை பிடித்து 2 வது இடத்தை பிடித்திருந்தார். இந்நிலையில் இவர் சக்கரவர்த்தி என்பவரின் பெயரில் வாங்கிய சீருடையை அணிந்து மோசடியாக விளையாடியது வருவாய்த்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதைத்தொடர்ந்து அவரை காவல்துறையிடமும் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் இதே போல் 5 காளைகளை பிடித்து 3 வது இடத்தில் உள்ள சின்னப்பட்டி தமிழரசன் என்பவரும், முடுவார்பட்டியை சேர்ந்த கார்த்தி என்பவரது சீருடையை மோசடியாக அணிந்து விளையாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரையும் வருவாய்த்துறையினர் கண்டுபிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்து உள்ளனர்.மேலும் 9 காளைகளை பிடித்து முதலிடத்தில் உள்ள சரங்தாங்கியை சேர்ந்த சிவசாமி என்பவர், மன்னாடிமங்களத்தை சேர்ந்த கார்த்திகிராஜா என்பவரின் சீருடையில் விளையாடியதாக புகார் எழுந்த நிலையில், அவரது ஆவணங்களை வருவாய் துறையினர் சோதனை செய்தனர்.
ஆய்வு செய்ததில், முதலிடத்தில் உள்ள கார்த்திக் ராஜா ஆவணம் சரியாக இருந்ததால் அவரை போட்டியில் தொடர்ந்து விளையாட வருவாய்த்துறை அனுமதி அளித்துள்ளனர். அவரது சகோதரர் பெயர் சிவசாமி என்பதால் உரிய ஆவணத்தை காண்பித்ததால் விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலக புகழ்பெற்ற பால்மேடு ஜல்லிக்கட்டு போட்டில் இதுவரை 5 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. ஜல்லிக்கட்டில் 5 சுற்றுகள் முடிவில் இதுவரை 447 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. மேலும் மதுரை, திருச்சி, கோவை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் உள்ளன.
மேலும் மதுரை எஸ்.பி தலைமையில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவிட் பாதிப்பின் காரணமாக இரு டோஸ் தடுப்பூசி மற்றும் கோவிட் நெகட்டிவ் சான்றி வைத்துள்ள உள்ளூர் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். போட்டியின் போது காயம் அடைபவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறந்த காளைக்கு கன்றுடன் பசுவும், சிறந்த வீரருக்கு காரும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர கடிகாரம், வெள்ளிக்காசு, தங்கக்காசு, பீரோ, பைக் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்களும் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளன.