Painters murder police investigating

திருமுல்லைவாயலில் நள்ளிரவில் பெயின்டர் சரமாரி வெட்டி கொலை செய்துள்ளனர். கள்ளக்காதலியின் கணவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை செய்து வருகின்றனர்.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், புதிய அண்ணாநகர், நேரு தெருவை சேர்ந்தவர் சிரஞ்சீவி, பெயின்டர். திருமணமாகவில்லை. இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்து வீடு திரும்பினார். பின்னர் இரவு சாப்பிட்டுவிட்டு, தனது நண்பர்களை பார்த்துவிட்டு வருவதாக வெளியே கிளம்பினார். நள்ளிரவு 12 ஆகியும் சிரஞ்சீவி வீட்டிற்கு வரவில்லை.

இதனையடுத்து ஆண்டு நள்ளிரவில் சிரஞ்சீவி தம்பிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய அவர், இளங்கோ தெருவில் சிரஞ்சீவி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு சிரஞ்சீவி உடல் முழுவதும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

பின்னர், தகவலறிந்து ஆவடி போலீஸ் கொலை நடந்த இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் போலீசார் கொலைவழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில்; கொலை செய்யப்பட்ட சிரஞ்சீவிக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதை அந்த பெண்ணின் கணவர், இருவரையும் பலமுறை கண்டித்துள்ளார். இதனால், சிரஞ்சீவிக்கும், பெண்ணின் கணவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்த கள்ளக்காதல் விவகாரத்தில் சிரஞ்சீவி கொலை செய்யப்பட்டாரா அல்லது குடிபோதையில் இளைஞர்களிடம் ஏற்பட்ட தகராறில் யாராவது அவரை வெட்டி கொலை செய்தார்களா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

மேலும், கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் பெண்ணின் கணவர் மற்றும் அவர்களது நண்பர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.