''பிரவீன் சக்கரவர்த்தி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. இது காங்கிரசின் கருத்து அல்ல. அவரது கருத்துக்கும் காங்கிரசுக்கும் தொடர்பு இல்லை'' என செல்வபெருந்தகை விளக்கம் அளித்திருந்தார்.

காங்கிரஸ் தலைவரும், ராகுல் காந்தியின் நெருங்கிய ஆலோசகருமான பிரவீன் சக்கரவர்த்தி தமிழக நிதி நிலைமை குறித்து பேசியதும், அதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளும் தான் இப்போது தமிழகத்தில் ஹாட் டாபிக் ஆக உள்ளது.

அதிக கடனில் தமிழகம் டாப்

அதாவது பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில், ''இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2010ல் உத்தரப்பிரதேசம் தமிழகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக கடன் வாங்கியிருந்தது. ஆனால் இப்போது தமிழகம் கடன் வாங்குவதில் உ.பி.யை ஓவர்டேக் செய்து விட்டது'' என்று கூறியிருந்தது.

பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு

பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. உத்தரப்பிரதேசத்துடன் தமிழ்நாட்டை ஒப்பிடுவது மிகவும் தவறானது. தமிழகம் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சியில் மிகவும் முன்னணியில் உள்ளது. நல்ல சிபில் ஸ்கோர் இருந்தால் தான் கடன் கிடைக்கும். தமிழகத்தின் நிதி மேலாண்மை சிறப்பாக இருப்பதால் தான் கடன் கிடைக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

இது காங்கிரசின் கருத்து அல்ல

மேலும் பிரவீன் சக்கரவர்த்தி அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் செல்வபெருந்தகை, ஜோதிமணி ஆகியோர் அவர் கூறியது தவறு என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர். ''பிரவீன் சக்கரவர்த்தி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. இது காங்கிரசின் கருத்து அல்ல. அவரது கருத்துக்கும் காங்கிரசுக்கும் தொடர்பு இல்லை'' என செல்வபெருந்தகை விளக்கம் அளித்திருந்தார்.

எனக்கு உடன்பாடு கிடையாது

இந்த நிலையில், மெத்த படித்தவர்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று பிரவீன் சக்கரவர்த்தி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், '' பிரவீன் சக்கரவர்த்தி கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. இந்தியாவிலேயே தமிழகம் தான் கடந்த ஆண்டு அதிக வளர்ச்சி அடைந்ததாக நீதி ஆயோக் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை உ.பி.யுடன் ஒப்பிட முடியாது

தமிழகத்தை உ.பி.யுடன் ஒப்பிட முடியாது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதை வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மெத்த படித்தவர்களின் கருத்துக்கு பதில் சொல்ல எனக்கு தகுதி கிடையாது. அவர் கூறிய கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என மீண்டும் சொல்கிறேன்'' என்றார்.