நெல்லை கல்குவாரி விபத்தில் தேடப்பட்டு வந்த உரிமையாளர் மற்றும் அவரது மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நெல்லை கல்குவாரி விபத்தில் தேடப்பட்டு வந்த உரிமையாளர் மற்றும் அவரது மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வட்டம், தருவை கிராமம், அடைமிதிப்பான்குளம் என்ற இடத்தில் கல் குவாரி ஒன்று அமைந்துள்ளது. இங்கு கல்குவாரியில் உடைத்து வைத்திருந்த கற்களை லாரிகள் மூலம் எம் சாண்ட் தயாரிக்கும் பகுதிக்கு எடுத்துச்செல்லும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது கல் குவாரியில் இருந்த பாறை திடீரென சரிந்து விழுந்தது. இதில் 300 அடி ஆழ பள்ளத்தில் முருகன், விஜய், செல்வம், முருகன், ராஜேந்திரன், செல்வகுமார் ஆகிய ஆறு பேர் சிக்கினர். இதுக்குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டர், ராட்சத இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இதில் முருகன் மற்றும் விஜய் ஆகிய இருவர் மீட்கப்பட்டு அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் 17 மணி நேர தீவிர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட செல்வம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திசையன்விளையை சேர்ந்த ஒப்பந்ததாரர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 பேரை மங்களூருவில் தனிப்படை கைது செய்தது. நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை கல்குவாரி விபத்து குறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருக்கும் குவாரி உரிமையாளரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கல்குவாரி விபத்து தொடர்பான வழக்கை விசாரிக்கும் நாங்குநேரி ஏ.எஸ்.பி-யான ராஜா சதுர்வேதி அமைத்துள்ள தனிப்படையினர் இருவரையும் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில் தற்போது 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
