பழனிசாமி என்னதான் கத்துனாலும் கதறுனாலும்! 7வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி! முதல்வர் மு.க.ஸ்டாலின்!
DMK Working Committee Meeting: திமுக செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் வாக்கு சதவீதக் கணக்குகளை மறுத்து, அதிமுகவின் வாக்குகள் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
திமுக செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனையடுத்து அக்கட்சியின் தலைவரும், முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்: ஏழாவது முறை ஆட்சி அமைக்கணும் என்பதுதான் நம்மோட இலக்கு. 200 தொகுதிகள்ல நம்மோட கூட்டணி வெல்லும்; 2026-ல் வெற்றி நமதுதான். என்னோட இந்த நம்பிக்கைக்கு ஆணிவேர் நீங்கதான். தேர்தல்னு வந்துட்டா, இரவு பகல் பார்க்காம வேலை செய்யிறவன் தான் கருப்பு – சிவப்பு தொண்டன். 1957-ல இருந்து 2024 வரை தேர்தல் களத்துல நாம எதிர்கொள்ளாத எதிரிகளே இல்ல. எதிர்ல நின்னவங்க எல்லாம் மாறிக்கிட்டே இருக்காங்க. இந்த இயக்கம் மட்டும் எப்பவும் உறுதியா இருக்கு. ஏன்னா.. இது எப்பவும் மக்களோட இருக்கு.
இதையும் படிங்க: 200 தொகுதிகளில் வெற்றி.! தொண்டர்களுக்கு இலக்கு நிர்ணயித்த திமுக
வரலாற்றோட முக்கியமான காலகட்டத்துல நாம 2026 சட்டமன்றத் தேர்தல எதிர்கொள்ள போறோம். பொய்ப் பரப்புரைகள், அவதூறுகளை புறந்தள்ளி நாடாளுமன்றத் தேர்தல்ல மக்கள் நமக்கு வெற்றிய வழங்கியிருக்காங்க. அரசியல்சட்டதையே மாத்தணும்னு துடிச்சு நாடாளுமன்றத்துலயே புரட்சியாளர் அம்பேத்கர அவமதிக்குறவங்களுக்கு இந்தியா கூட்டணி மூலம் ஜனநாயகக் கடிவாளம் போட்டிருக்கோம். இதுதான் நம்ம இயக்கத்துக்கும் - உங்களுக்கும் -எனக்குமான பெருமை என்றார்.
மேலும் பேசிய அவர் கொஞ்ச நாளா எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஒரு வாக்கு சதவீத கணக்க சொல்றார். அம்மையார் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்குல திருவாளர் குமாரசாமி போட்ட கணக்கையே மிஞ்சுற மாதிரி அது இருக்கு. 'காத்துல கணக்கு போட்டு கற்பனையில கோட்டை கட்டும்' பழனிசாமி - “கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தல்ல அதிமுக வாக்கு சதவீதம் 1 விழுக்காடு உயர்ந்திருக்கு”-னு உளறி இருக்கார். இல்லாததை இருப்பதுபோல ஊதிப்பெருக்கிக் காட்டுவது பழனிசாமிக்கு கைவந்த கலைதான் என விமர்சித்தார்.
2019 நாடாளுமன்றத் தேர்தல்ல 20 தொகுதிகள்ல போட்டியிட்ட அதிமுக 19.4 விழுக்காடு வாக்குகளை வாங்குச்சு. இதுவே 2024 நாடாளுமன்ற தேர்தல்ல 34 தொகுதிகள்ல போட்டியிட்டும் வெறும் 20.4 விழுக்காடு வாக்குகளைத்தான் வாங்கியிருக்கு. 14 தொகுதிகள்ல அதிகமா போட்டியிட்ட அதிமுக நியாயமா பார்த்தா 32.98 விழுக்காடு வாக்குகளை 2024 தேர்தல்ல பெற்றிருக்கணும். ஆனா, அதைவிட 12.58 விழுக்காடு வாக்குகள் குறைவாதான் வாங்கியிருக்கு. எளிமையா சொன்னா, 2019-ல சராசரியா ஒரு தொகுதிக்கு 4.16 லட்சம் வாக்குகள் வாங்குன அதிமுக - 2024-ல வெறும் 2.61 லட்சம் வாக்குகள்தான் வாங்கியிருக்கு. ஒவ்வொரு தொகுதிலயும் சராசரியா 1.5 லட்சம் வாக்குகளை இழந்திருக்கு எடப்பாடி தலைமையிலான அதிமுக. இப்படி, மக்களால் நிராகரிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்ட பழனிசாமி, அதிமுக தொண்டர்களுக்கு சாதாரண கூட்டல் வகுத்தல் கணக்கே தெரியாதுனு நம்பி பொய்க்கணக்கை அவிழ்த்துவிட்டிருக்கார். அவர் சொன்ன கணக்கை அடிப்படை அறிவுள்ள அதிமுக காரங்களே நம்ப மாட்டாங்க என்றார்.
கோழைச்சாமியான பழனிசாமி டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிரா பா.ஜ.க.வ கண்டிச்சாரா? புரட்சியாளர் அம்பேத்கரை கொச்சைப்படுத்துன ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிரா கீச்சுக்குரலிலாவது கத்துனாரா? பிரதமர எதிர்த்துப் பேசுற துணிவு அவருக்கு இருக்கா? திமுக என்றால் மட்டும் சட்டமன்றத்துலயும் கத்தி பேசுறாரு. வெளியிலயும் கத்திப் பேசுறாரு. பழனிசாமி அவர்கள் என்னதான் கத்துனாலும் எப்படித்தான் கதறுனாலும் அவரோட துரோகங்களும் குற்றங்களும்தான் எல்லாருக்கும் ஞாபகம் வரும்.
இதையும் படிங்க: ஜாக்பாட்! பொங்கல் முந்தைய நாளும் லீவு! பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 6 நாட்கள் விடுமுறை!
யாரால கட்சிக்குள்ள வந்து எம்.எல்.ஏ, மந்திரி ஆனீங்களோ அவங்க வாழ்ந்த பங்களாவுலேயே கொள்ளையடிப்பதை உங்க ஆட்சியில வேடிக்கை பார்த்தீங்க. யார் தயவுல ஆட்சிய நடத்துனீங்களோ அவங்களோட கூட்டணி சேர்ந்தா கிடைக்கிற ஓட்டும் கிடைக்காதுன்னு கூட்டணியிலிருந்து விலகி நின்னீங்க. அப்புறம் அவங்க போட்ட கேஸ்களுக்கு பயந்து அவங்க கூடவே கள்ளக்கூட்டணி வச்சிக்கிட்டீங்க. இப்பவும் எங்கள பாத்து கத்துற - கதறுற பழனிசாமி தன்னோட டெல்லி எஜமானர்கள நினைச்சாலே பம்முறாரு – பதறுறாரு. மகளிர்கிட்ட நம்ம ஆட்சி மேல பெரும் நம்பிக்கை இருக்கு. அவங்க நம்ம ஆட்சி மேல பெரிய மதிப்பு வெச்சிருக்காங்க. அதை முழுமையா நமக்கு ஆதரவான வாக்குகளா மாத்தணும் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.